என்னது உதயநிதி ஜெயிலுக்குப் போனரா? 1977 முதல் அத்தனை போராட்டத்துக்கும் வந்தாரா? விருப்ப மனுவால் ஷாக் ஆன உ.பி.க்கள்
திமுக தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதி, அக்கட்சி நடத்திய அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்று சிறை சென்றதாக ஒரு வரலாற்றுக்கு புறம்பான பொய்யான தகவலை திருவாரூர் தொகுதிக்கான வேட்பாளர் விருப்ப மனுவில் குறிப்பிடப்பட்டிருப்பது அக்கட்சியின் உண்மை தொடர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
திருவாரூர் தொகுதியில் கருணாநிதி மகன் ஸ்டாலின் அல்லது மகள் செல்வி போட்டியிடலாம் என கூறப்பட்டது. அதே நேரத்தில் பேரன் உதயநிதியை நிறுத்தவும் அவரது தரப்பு படுதீவிரமாக முயற்சித்துக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் உள்ளிட்ட நிர்வாகிகள் திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர் விருப்ப மனுக்களைத் தாக்கல் செய்தனர். அப்போது ஸ்டாலின் போட்டியிட வேண்டும் என்பதற்காகவும் விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஸ்டாலின் கேட்டுக் கொண்டதால் பூண்டி கலைவாணனும் விருப்ப மனுத் தாக்கல் செய்திருக்கிறார். அத்துடன் உதயநிதி ரசிகர் மன்றத்தினரும் திருவாரூரில் உதயநிதி போட்டியிட விருப்ப மனு கொடுத்துள்ளனர். அவர்கள் விருப்ப மனு கொடுப்பதில் யாரும் தடுக்கவில்லை.
ஆனால் அப்படி கொடுக்கப்பட்ட மனுவில் வரலாற்றுக்குப் புறம்பான தகவல்களை துணிச்சலுடன் கொடுத்திருப்பதுதான் உண்மை திமுக தொண்டர்களை கொதிக்க வைத்திருக்கிறது. அதாவது விருப்ப மனுவில் சிறை சென்ற அனுபவம் இருக்கிறதா? என்பதற்கு ஆம் என்றும் கழகம் நடத்திய போராட்டங்களின் போதும் சிறை சென்றார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
உதயநிதி ஸ்டாலின் நடிகராகி ஓரளவு அறிமுகமான பின்னர்தான் அரசியலில் எட்டிப் பார்க்க தொடங்கி இருக்கிறார். ஆனால் இப்படி பூசாமல் பொய் சொல்லி அதை தலைமையிடம் தாக்கல் செய்வதற்கு ஒரு கூச்சம் வேண்டாமா? என கொந்தளிக்கின்றனர்.
இன்னொன்றையும் திமுக தொண்டர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். திமுகவில் உதயநிதி பிறந்த 1977-ம் ஆண்டு முதல் உறுப்பினர் என அந்த விருப்ப மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. சரி,,, தலைவர் குடும்பம்.. உறுப்பினர் அட்டை வைத்திருக்கலாம்.. அதில் சிக்கல் இல்லை. ஆனால் 1977-ம் ஆண்டு முதல் நடைபெற்ற அத்தனை போராட்டங்களிலும் உதயநிதி பங்கேற்று சிறை சென்றிருக்கிறாரா? எதிர்க்கட்சிக்காரன் பட்டியல் கேட்பானே...என்ன பதில் சொல்வது?
காலையில் கைதாகி மாலையில் விடுதலையான நிகழ்வுகள் ஒன்று அல்லது இரண்டில்தான் உதயநிதி பங்கேற்றிருப்பார்.. அப்படி இருக்கையில் அள்ளிவிடுவதற்கும் அளவு வேண்டாமா? என்பதுதான் திமுக உண்மை தொண்டர்களின் உள்ளக் குமுறல்.