ரொம்ப பணக் கஷ்டமா இருக்கு... திருவாரூர் தேர்தலை எப்படியும் பயன்படுத்திக்கனும்... கணக்குப் போடும் ஜெ. தீபா!

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா பற்றி கடைசியாக வந்த செய்தி, ரூ.1.12 கோடி பெற்று திரும்பத் தராமல் மிரட்டுகிறார்கள் என தீபா பேரவையைச் சேர்ந்த ஒருவர் காவல் ஆணையரிடம் புகார் கொடுத்ததுதான். தற்போது திருவாரூர் தேர்தலையொட்டி மீண்டும் வெளிச்சத்துக்கு வர இருக்கிறாராம் தீபா.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் வெளிச்சத்துக்கு வந்த ஜெ.தீபா கடந்த ஓராண்டில் அதிகப்படியான சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். கணவர் மாதவனுடன் மோதல், கார் டிரைவர் ராஜாவுடன் மோதல், தீபக்குடன் சண்டை, போயஸ் கார்டனில் சொத்து தகராறு, கட்சி நிர்வாகிகள் மீது புகார், ராஜா மீது புகார் என சர்ச்சைகளின் நாயகியாக தீபா இருக்கிறார்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், தீபா கட்சிப் பிரமுகருமான முட்டை வியாபாரியுமான ராமச்சந்திரன், சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

எம்ஜிஆர் அம்மா தீபா பேரவையில் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட செயலாளராக நான் பணியாற்றி வந்தேன். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அவரது அண்ணன் மகள் தீபாவை தலைவியாக ஏற்றுக் கொண்டு செயல்பட்டேன்.

அவரது கார் டிரைவர் ஏ.வி. ராஜா என்னைத் தொடர்புகொண்டு தீபா மிகவும் கஷ்டப்படுவதாகவும், அவசரக் கடனை உடனே திரும்ப செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதாகவும், தி.நகரில் உள்ள வீட்டில் மராமத்து வேலைகள் இருப்பதாகவும் கூறினார்.

இதற்காக ரூ.50 லட்சம் கடனாக வேண்டும் என்று தீபா கூறியதாகவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நான் தீபாவிடமும், ராஜாவிடமும் ரூ.50 லட்சம் கடனாக வழங்கினேன்.

இதன் பின்னர் பல்வேறு கால கட்டங்களில் பணப் பற்றாக்குறை ஏற்பட்டதாக தீபா என்னிடம் நேரிலும், தொலைபேசியிலும் கேட்டுக்கொண்டார். இதன் அடிப்படையில் ரூ.2 லட்சம், ரூ.1 லட்சம், ரூ.50 ஆயிரம், ரூ.25 ஆயிரம் என மொத்தம் ரூ.19 லட்சம் கொடுத்துள்ளேன்.

இந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் தீபாவின் கணவர் மாதவன் வீட்டில் இருந்த ரூ.50 லட்சத்தை திருடிச்சென்று விட்டதாக தீபாவும், ராஜாவும் அழுது புலம்பி கண்ணீர் வடித்தனர். மீண்டும் அவசிய செலவுக்காக ரூ.10 லட்சம் கேட்டனர். இந்த பணத்தையும் ராஜா முன்னிலையில் தீபாவிடம் கொடுத்தேன்.

இதன்படி தீபாவும், அவரது கார் டிரைவர் ராஜாவும் ரூ.1 கோடியே 12 லட்சம் மோசடி செய்துள்ளனர். நான் உழைத்து சம்பாதித்த பணத்தையும், நண்பர்கள், உறவினர்களிடம் வாங்கி கொடுத்த பணத்தையும் பெற்றுக் கொண்டு என்னை மாவட்ட செயலாளர் ஆக்குகிறேன், மந்திரி ஆக்குகிறேன் என ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி விட்டனர்' எனக் கூறியிருந்தார்.

இந்தப் புகாரின் பேரில் தீபா மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கார்டன் சொத்துக்களும் கைக்கு வராததால், மிகுந்த பணக் கஷ்டத்தில் இருக்கிறாராம் தீபா. இந்த் நிலையில் திருவாரூர் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

திருவாரூரில் தம்மை வேட்பாளராக்க அதிமுக தரப்பு பேச்சுக்கு வரும்... அப்போது லம்பாக்காக கறந்து பிரச்சனைகளை முடித்துவிடலாம் என இலவு காத்து கொண்டிருக்கிறதாம் தீபா தரப்பு.

More News >>