பிரதமரான பின் முதல் தடவையாக உண்மையை பேசியுள்ளார் - மோடியை கிண்டல் செய்த சிவசேனா!
மோடி பிரதமரான பின்பு ராமர் கோயில் விவகாரத்தில் தான் முதன் முறையாக உண்மையை பேசியுள்ளார் என்று சிவசேனா கிண்டல் செய்துள்ளது.
பா.ஜ.க.வின் கூட்டணிக் கட்சியான சிவசேனா ராமர் கோயில் விவகாரத்தில் சமீப காலமாக நெருக்கடியை கொடுத்து வருகிறது. ராமர் கோயில் கட்டுவது பற்றி முதலில் முடிவெடுங்கள், அப்புறம் லோக்சபா தேர்தல் கூட்டணி பற்றி பேசுவோம் என சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பா.ஜ.க.வுக்கு சமீபத்தில் கண்டிசன் போட்டார்.
இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி தனியார் செய்தி நிறுவனத்துக்கு கொடுத்த பேட்டியை கிண்டலடித்து சிவசேனா கட்சி நாளிதழான சாம்னாவில் தலையங்கம் வெளியாகி உள்ளது. இதில், பிரதமர் தனது பேட்டியிலாவது கடந்த தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிப்படி ராமர் கோயில் கட்டுவது பற்றிய உறுதியான முடிவை அறிவிப்பார் என்ற எதிர்பார்ப்பு பொய்யாகிவிட்டது.
ஆனால் கோர்ட் பிரச்னை முடிந்தவுடன் ராமர் கோயில் பற்றி அவசரச் சட்டம் கொண்டு வரப்படும் என்று கூறியுள்ளார். இது தான் பிரதமரான காலத்தில் மோடி முதன் முறையாக பேசிய உண்மையான வார்த்தைகள். பா.ஜ.க. தனது தேர்தல் ஆதாயத்திற்காகவே ராமர் கோயில் கோஷத்தை முன்வைக்கிறது.
வரும் தேர்தலிலும் இதே கோஷத்தை கையில் எடுக்கும். வரும் தேர்தல் பற்றிய பயம் மோடிக்கு இப்போதே வந்து விட்டது. பேட்டியின் போது அவருடைய முக பாவனைகளே இதை அப்பட்டமாக காட்டுகிறது என்று சாம்னா தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.