திருவாரூர் இடைத்தேர்தல்... அண்ணன் அழகிரி ஏன் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறார்? புரியாத புதிராக ஆதரவாளர்கள்
திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் மு.க. அழகிரியோ ஏதோ ஒருவித மகிழ்ச்சியில் டென்சனே இல்லாமல் இருப்பது அவரது ஆதரவாளர்களிடம் புரியாத புதிராக இருக்கிறது.
திருவாரூர் தேர்தலில் பாஜக வேட்பாளராக அழகிரி போட்டியிடுவார்; திமுகவை வீழ்த்த அழகிரி உள்குத்து வேலைகளில் ஈடுபடுவார் என்றெல்லாம் செய்திகள் ரெக்கை கட்டி பறக்கின்றன. மேலும் அழகிரியை வளைக்க மதுரை வரும் பிரதமர் மோடி அவரது வீட்டுக்கு செல்லவும் திட்டமிட்டிருக்கிறார்.
இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் அழகிரி மட்டும் மிக அமைதியாக இருக்கிறார். அவர் அமைதியாக இருந்தால் கூட பரவாயில்லை.
வழக்கத்தை விட மிக மகிழ்ச்சியாக இருக்கிறார்... திருவாரூரில் திமுக தோற்கும் என்கிற மகிழ்ச்சியிலா? அல்லது திமுகவில் மீண்டும் இணையப்போகிறோம் என்கிற நெகிழ்ச்சியிலா? இது தெரியாமல் அவரது ஆதரவாளர்கள் குழம்பியுள்ளனர்.
அண்மையில் ஸ்டாலின் மனைவி துர்கா, காசிக்கு சென்று வந்தது தொடர்பாக சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்ட போது, தமது ஆதரவாளர்களை தடுத்து நிறுத்தியது முதல் அழகிரியின் போக்கில் மாற்றங்கள் இருக்கின்றன என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.