ஆறு மிஸ்டுகால்... அபகரிக்கப்பட்ட ரூ.1.86 கோடி!
மும்பையில் தொழிலதிபர் ஒருவரின் வங்கி கணக்கிலிருந்து ரூ.1 கோடியே 86 லட்சம் அபகரிக்கப்பட்டுள்ளது. அவரது மொபைல் எண்ணுக்கு மிஸ்டுகால் கொடுத்து இக்கொள்ளை அரங்கேற்றப்பட்டுள்ளது.
மும்பையை சேர்ந்த ஜவுளி தொழிலதிபர் ஒருவரது சிம் கார்டு டிசம்பர் 28ம் தேதி வேலை செய்யவில்லை. தனக்கு சிம் கார்டு வழங்கிய நிறுவனத்தை அவர் தொடர்பு கொண்டபோது டிசம்பர் 27 அன்று இரவு 11:15 மணிக்கு சிம் கார்டை முடக்கும்படி நீங்கள் கேட்டுக்கொண்டுள்ளீர்கள். அந்த கோரிக்கையின் பேரில் உங்கள் சிம் கார்டு முடக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளனர். அப்போதுதான் அவருக்கு தம் எண்ணுக்கு ஆறு மிஸ்டுகால் வந்திருந்தது நினைவுக்கு வந்துள்ளது. டிசம்பர் 27ம் தேதி இரவு 11:44 மணியிலிருந்து டிசம்பர் 28ம் தேதி அதிகாலை 1:58 மணி வரை வந்த அழைப்புகளில் இரண்டு, பிரிட்டனிலிருந்து வந்திருந்ததையும் கவனித்தார். டிசம்பர் 29ம் தேதி அவருக்கு புது சிம் கார்டு கிடைத்தது.
அன்றைக்கு தொழிலதிபரின் வங்கி கணக்கிலிருந்து பண பரிமாற்றம் செய்யும்படியாய் அவரது ஊழியர் ஒருவர் வங்கியை அணுகியுள்ளார். அப்போதுதான் தொழிலதிபரின் கணக்கிலிருந்து 1 கோடியே 86 லட்சம் பணம் எடுக்கப்பட்டு கணக்கில் பணம் இருப்பில்லாதது தெரிய வந்தது. அதிர்ந்து போன அவர், மும்பை சைபர் குற்றப் பிரிவில் புகார் செய்துள்ளார்.
காவல்துறையினரின் விசாரணையில் 15 வங்கி கணக்குகளுக்கு 28 பரிவர்த்தனைகள் மூலம் பணம் மாற்றப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அந்த 15 கணக்குகளில் ஒன்று கூட வழக்கமாக அவர் பண பரிமாற்றம் செய்வது அல்ல என்பதும், அவை அனைத்துமே தொழிலதிபர் செய்யாத பரிமாற்றங்கள் என்பதும் தெரிய வந்தது.
சிம் கார்டை முடக்கி பண பரிவர்த்தனைக்கான ரகசிய எண் (OTP) அனுப்பப்பட்டுள்ளதை அறிந்திட முடியாமல் மறைத்து நவீன முறையில் பணம் அபகரிக்கப்பட்டுள்ளதை காவல் துறையினர் கண்டறிந்துள்ளனர். தொழிலதிபரின் வங்கி கணக்கு விவரங்களையும் அவரது மொபைல் எண்ணையும் தெரிந்து கொண்ட யாரோ இத்திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்ற நோக்கில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இது 'சிம் ஸ்வப்பிங்' என்ற வகையிலான திருட்டு என்றும்,திடீரென சிம் கார்டு முடக்கப்பட்டால் உடனடியாக தொடர்புடைய சேவை நிறுவனத்துக்கு தெரிவிக்க வேண்டும் என்றும், சந்தேகம் இருப்பின் தங்களிடம் புகாரளிக்க வேண்டும் என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.