நிலையில்லா மனுஷன் இந்த நாஞ்சில் சம்பத்! கடுமையாகச் சாடிய ஸ்டாலின்
ஆடிய காலும் பாடிய வாயும் சும்மா இருக்காது என்பார்கள். அரசியல் மேடைகளில் பேச முடியாமல் மனஅழுத்த பாதிப்புக்கே ஆளாகிவிட்டாராம் நாஞ்சில் சம்பத்.
திமுக மேடைகளில் பேச என்னை அழைக்கிறார்கள் என அவர் பேசியதைக் கேட்டு சிரித்தாராம் ஸ்டாலின்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இருந்து கடந்தாண்டு மார்ச் மாதம் விலகினார் நாஞ்சில் சம்பத்.
அப்போது ஊடகத்துக்குப் பேட்டி அளித்த அவர், "காலம் காலமாக எந்த கொள்கையை பேசி வந்தேனோ, காலங்காலமாக எந்த கொள்கையை எங்கெல்லாம் கொண்டுச்சென்றேனோ அந்த கொள்கையை ஒரு பகலில் படுகொலை செய்துவிட்டார் தினகரன். இன உணர்வு கொள்கையை கொட்டிக்கவிழ்த்து விட்டார் தினகரன்.
அண்ணாவையும், திராவிடத்தையும் புறக்கணித்த இந்த பெயரில் எனக்கு உடன்பாடு இல்லை, டிடிவி அறிவித்த கட்சி பெயரில் அண்ணாவும், திராவிடமும் இல்லை இனிமேல் அரசியல் என்ற சிமிழில் அடைப்பட்டுகிடக்க மாட்டேன்.
இனி எந்த கட்சிக்கொடியையும் தூக்கி சுமக்க மாட்டேன். எந்த தலைவனையும் இனி ஏற்றுக்கொள்ள மாட்டேன். இனி தனிப்பறவையாக பறப்பேன். என்னை யாரும் சமாதானப்படுத்த முடியாது. என்னை யாரும் நெருங்க முடியாது.
கரையான்கள் நெருப்பை அரிக்க முடியாது. என் மூளையைச் சலவை செய்ய எந்த முட்டாளும் முயல வேண்டாம். அடுத்தக்கட்டமாக இலக்கிய பணியை செய்வேன், இனி இளைஞர்களுக்கு பேச்சுப்பயிற்சி அளிக்க உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்" என்றார்.
தினகரனும், "நாஞ்சில் சம்பத் எங்கள் அணியிலிருந்து விலகியது வருத்தமளிக்கிறது. ஆனால், திராவிடத்தை புறக்கணித்துவிட்டதாக நாஞ்சில் சம்பத் கூறுவதை ஏற்க முடியாது. கட்சிக்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என பெயரிட்டிருப்பது தற்காலிக ஏற்பாடுதான்.
அதிமுகவையும் சின்னத்தையும் மீட்டெடுப்பதே எங்கள் இலக்கு என ஆரம்பம் முதலே கூறிவருகிறோம். நாங்கள் பரிந்துரைத்திருந்த கட்சிப் பெயர்களில் திராவிடம் இருந்தது. ஆனால், எங்களுக்கு அது கிடைக்கவில்லை.
ஜெயலலிதாவுக்கும் திராவிடத்துக்கும் தொடர்பு இல்லாததுபோல் நாஞ்சில் சம்பத் பேசியிருக்கிறார்" என்றார்.
இலக்கிய மேடைகளில் தனிப்பறவையாக பறப்பேன் எனக் கூறினாலும், அரசியல் கட்சிகளோடு தொடர்பில் இருந்து வருகிறார் சம்பத்.
கோவையில் நடந்த அமமுக பொருளாளர் திருமணத்திலும் அவர் பங்கேற்றார். மீண்டும் அமமுக என செய்தி கிளம்பியதால், திமுகவில் இருந்து அழைக்கிறார்கள் என்றார் நாஞ்சில் சம்பத். அவரது கோரிக்கையை பற்றி ஸ்டாலினிடம் பேசியுள்ளனர் பொறுப்பாளர்கள் சிலர். அப்போது பதில் கொடுத்த ஸ்டாலின், ' நிலையில்லாத மனுஷன் இந்த நாஞ்சில் சம்பத். நம்மிடம் ஒன்று பேசுவார். வெளியில் ஒன்றைக் கூறுவார். அவர் வந்தாலும் சேர்த்துக் கொள்ளும் முடிவில் இல்லை' எனக் கூறிவிட்டாராம். இதற்குக் காரணம், அதிமுகவில் இருந்த விலகியபோது, சேகர்பாபு மூலமாக தூது அனுப்பிவிட்டு, பின்னர் சசிகலாவை கார்டனில் சந்தித்து அவர் ராசியானதுதான் காரணமாம்.
அருள் திலீபன்