முரசொலி செல்வம்தான் சரியான சாய்ஸ்! அழகிரி கோபத்தைத் தணிக்கும் கோபாலபுரம்

எனது விசுவாசிகள் ஆசைப்பட்டால் நான் திருவாரூர் தொகுதியில் போட்டியிடுவேன் என முன்னரே கூறியிருந்தார் அழகிரி. இப்போது அவரைச் சமாதானப்படுத்துவதற்குச் சரியான நபரைத் தேடிக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின்.

திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலுக்கு 24 நாட்கள் இருக்கின்றன. அதிமுக, திமுகவும் பிரதான போட்டியாளர்களாக களத்தில் நின்றாலும், தினகரனின் அதிரடிகளைச் சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றன அரசியல் கட்சிகள்.

இன்று எஸ்.காமராஜை வேட்பாளராக அறிவித்துவிட்டார் தினகரன். ஆளும்கட்சியும் எதிர்க்கட்சியும் விருப்ப மனு வாங்கியதோடு இன்னும் எந்தப் பதிலையும் சொல்லாமல் இருக்கின்றனர்.

இந்தத் தேர்தலில் அழகிரியின் அதகளத்தைத்தான் தொகுதிவாசிகள் எதிர்பார்த்துக் காத்துள்ளனர். அவரது வருகையை எடப்பாடி பழனிசாமியும் எதிர்பார்க்கிறார்.

' திமுகவை மண்ணைக் கவ்வ வைக்க அழகிரி ஒருவரே போதும். நாம் செய்ய வேண்டிய வேலையை அவர் பார்த்துக் கொள்வார். தொகுதிக்குள் சாதி அடிப்படையில் ஒவ்வொரு மந்திரியும் களமிறங்கியாக வேண்டும். திருவாரூரில் நாம் ஜெயிக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.

திருவாரூரில் போட்டியிடுவது குறித்து முன்பொருமுறை பேசிய அழகிரி, இடைத்தேர்தலைப் பொறுத்தவரையில் எனது விசுவாசிகள் கேட்டு கொண்டால் திருவாரூரில் போட்டியிடுவேன். தனியாக கட்சி துவங்கி போட்டியிடும் எண்ணமில்லை. அப்படி நான் போட்டியிட்டால் அனைத்துக் கட்சியினரும் என்னை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை உண்டு.

மெரினாவில் அமைதிப் பேரணி நடத்தியது கலைஞரின் நினைவுக்காக நடத்தப்பட்டது. எனது பலத்தை நிரூபிக்கவோ, தனிக்கட்சி தொடங்கவோ இல்லை. தலைவர் கலைஞரின் கொள்கைகளை என்றும் நான் பின்பற்றுவேன். தமிழகத்தைப் பொறுத்தவரையில் இரு கட்சிகளுமே போராட்டம் மட்டுமே நடத்தி வருகிறது’ என்றார்.

இப்போது தேர்தலில் அவர் போட்டியிட வேண்டும் என அவரது தரப்பில் உள்ளவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஆனால், அழகிரி போட்டியிட்டால் ஸ்டாலினுக்காக வெற்றி கிட்டாது என்பதால், கடும் மனவருத்தத்தில் உள்ளனர் கோபாலபுரத்தில் உள்ளவர்கள்.

இதைப் பற்றிப் பேசும் குடும்பத்தினர், ' நாம் யார் சொன்னாலும் அழகிரி கேட்க மாட்டார். முரசொலி செல்வம் என்ன சொன்னாலும் அழகிரி கேட்பார். அவர் மூலமாக சமாதானம் பேசுவதுதான் நல்லது. எவ்வளவு பிரச்னை வந்தாலும் செல்விதான் நடுவில் அமர்ந்து பஞ்சாயத்து பேசுவார். இந்தமுறையும் அவர்கள் இருவரையும் அனுப்பி வைப்போம். அவர்கள் சொல்வதை அழகிரி கேட்பார்' எனக் கூறியிருக்கிறார்களாம்.

- அருள் திலீபன்

More News >>