அழகிரிக்கு மோடி செய்த கைம்மாறு இது! அச்சத்தில் அண்ணா அறிவாலயம்
திருவாரூர் இடைத் தேர்தல் தொடர்பாக அதிமுகவின் ஆட்சிமன்றக் குழு கூட்டம் இன்று நடைபெறுவதாக இருந்தது. இதனை நாளைக்கு ஒத்தி வைத்திருக்கிறார்கள். திமுகவில் வேட்பாளர் தேர்வுப் பணிகள் நடந்து வருகின்றன. இந்தத் தேர்தலை அழகிரியை முன்வைத்து பிஜேபி ஆடுகிறதா என்ற சந்தேகம், திமுகவினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
திருவாரூர் தேர்தல் வருகின்ற 28-ம் தேதி நடைபெற உள்ளது. திமுக, அதிமுக சார்பில் வேட்பாளர்கள் தேர்வு இன்னும் முடிவுக்கு வரவில்லை. அமமுக வேட்பாளராக எஸ்.காமராஜ் என்பவரது பெயரை அறிவித்திருக்கிறார் டிடிவி தினகரன். இவர் திருவாரூர் மாவட்ட அ.ம.மு.க செயலாளராக இருக்கிறார். நேற்று பெங்களூரு சிறையில் சசிகலாவை நேரில் சந்தித்து பேசினார் தினகரன். அப்போது வேட்பாளர் தேர்வு குறித்து அவரிடம் பேசினார். அவரது ஒப்புதல் கிடைத்ததால் காமராஜ் பெயரை அவர் அறிவித்துவிட்டார். இந்தத் தேர்தலில் திமுகவுக்குப் பெரும் தலைவலியாக உருவெடுத்திருக்கிறார் அழகிரி. அவர் எடுக்கப் போகும் முடிவைப் பொறுத்தே திமுகவுக்கான வெற்றி தோல்விகள் இருக்கும் என அரசியல் நோக்கர்கள் பேசி வருகின்றனர்.
20 தொகுதிகள் காலியாக இருக்கும்போது, திருவாரூருக்கு மட்டும் தேர்தலை அறிவித்ததன் ரகசியம் என்ன எனக் கேள்வி எழுப்பியிருந்தார் திராவிடர் கழகத் தலைவர் வீரமணி. இந்தத் தேர்தலின் பின்னணியில் அழகிரி இருக்கிறாரோ என அச்சத்தோடு பேசுகின்றனர் திமுகவினர். அவர்கள் கூறும்போது, கருணாநிதி மறைவுக்குப் பிறகு அவர்கள் குடும்பத்தில் என்ன நடக்கிறது என்பதை அறிந்து கொள்வதில் மோடி ஆர்வமாக இருக்கிறார். கருணாநிதி உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தபோதுகூட, அழகிரி எங்கே என மோடி கேட்டதாக செய்தி வெளியானது. இதற்கு முன்னதாக கோபாலபுரம் வீட்டுக்கு வந்திருந்தார் மோடி. அப்போது அழகிரி அங்கே இல்லை. பிரதமர் வருகைக்கு நன்றி தெரிவித்துக் கடிதம் எழுதிய அழகிரி, இந்த நாட்டை சிறப்பாக நீங்கள் வழிநடத்துகிறீர்கள் எனப் பாராட்டியிருந்தார்.
நானும் இருக்கிறேன் என்பதைக் காட்டிக் கொள்ளும் வகையில் கடிதம் எழுதியிருந்தார். இந்தக் கடிதம் ஊடகங்களில் வெளியானது. திருவாரூரில் தேர்தல் நடந்தால் இதையே காரணம் காட்டி கலகம் செய்வார் அழகிரி என்பதையும் அறிந்து வைத்திருந்தார் மோடி. கூட்டணி விஷயத்தில் பிஜேபியைப் புறக்கணித்துவிட்டது திமுக. ராகுல்காந்தியை முன்னிறுத்தி ஸ்டாலின் பேசி வருவதில் மோடிக்கு உடன்பாடில்லை. எல்லாவற்றையும் கணக்குப் போட்டுப் பார்த்த பிறகுதான், திருவாரூர் தேர்தல் தேதியை அறிவிக்க வைத்தார். இது ஒருவகையில் அழகிரிக்கு மோடி செய்த கைம்மாறாகவும் பார்க்கலாம்' என்கின்றனர்.