ஜெ. மர்ம மரணம்- அமைச்சர்கள் சண்முகம், ஜெயக்குமாருக்கு எதிராக ஐஏஎஸ் அதிகாரிகள் சங்கம் போர்க்கொடி- கோட்டையில் பரபரப்பு!
தமிழக அமைச்சர்களுக்கு எதிராக ஐஏஎஸ் அதிகாரிகள் பகிரங்கமாக போர்க்கொடி தூக்கியிருப்பதால் தலைமை செயலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெயலலிதா மர்ம மரண விவகாரத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மீது கடும் விமர்சனங்களை வைத்தார் சட்ட அமைச்சர் சிவி சண்முகம். ராதாகிருஷ்ணனை விசாரிக்க வேண்டும் எனவும் சண்முகம் வலியுறுத்தினார்.
அமைச்சர் சண்முகத்தின் வெளிப்படையான இந்த புகார் ஐஏஎஸ் அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்திருந்தார்.
சண்முகத்தின் கருத்துகளை ஆதரிப்பதாக கூறிய அமைச்சர் ஜெயக்குமார், உதைத்து உண்மைகளை வாங்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். இந்த இரு அமைச்சர்களின் எடுத்தேன் கவிழ்த்தேன் பேச்சு ஐஏஎஸ் அதிகாரிகளை கொந்தளிக்க வைத்தது.
இதனைத் தொடர்ந்து சென்னையில் ஐஏஎஸ் அதிகாரிகளின் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் சென்னையில் கடந்த 2-ந்தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அமைச்சர்கள் சண்முகம், ஜெயக்குமாரின் விமர்சனங்களுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் இந்த விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலையிட வேண்டும் எனவும் வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இத்தீர்மான விவரங்களை முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் தலைமை செயலகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் நேரில் சந்தித்து வழங்கினர். அமைச்சர்களுக்கும் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கும் இடையே பகிரங்கமாக வெடித்த மோதலால் கோட்டை வட்டாரங்களில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.
- எழில் பிரதீபன்