மெல்போர்ன் டெஸ்ட் : பாலோ ஆனை தவிர்க்க ஆஸி.போராட்டம் - மழையால் போட்டி பாதிப்பு!
மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் 3-ம் நாள் ஆட்டத்தில் பாலோ ஆனை தவிர்க்க ஆஸ்திரேலியா போராடி வருகிறது. ஆஸி அணி 6 விக்கெட்டுகளை இழந்து 236 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதிக்கப்பட்டது.
ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடந்து வருகிறது. இந்தியா முதல் இன்னிங்சில் புஜாரா, ரிஷப்பான்ட் ஆ கியோரின் அபார சதத்தால் 7 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. முதல் இன்னிங்சை தொடர்ந்த ஆஸி அணி 2-ம் நாள் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்திருந்தது.
ஹாரிஸ் 19 ரன்களுடனும், கவாஜா 5 ரன்களுடனும் 3-ம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். உணவு இடைவேளைக்கு முன் குல்தீப் யாதவ் பந்தில் கவாஜா 27 ரன்களில் அவுட்டானார். உணவு இடைவேளைக்குப் பின் அதிரடியாக ஆடி அரைசதம் கடந்த ஹாரிஸ் 79 ரன்களில் ஜடேஜாவின் சுழலில் வீழ்ந்தார். தொடர்ந்து ஜடேஜாவும், குல்தீப்பும் சுழலில் அசத்த ஆஸி.
வீரர்கள் ரன் எடுக்க திணறி அடுத்தடுத்து வீழ்ந்தனர். தேநீர் இடைவேளைக்குப் பின் ஆஸி அணி 6 விக்கெட் இழப்பிற்கு 236 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட எஞ்சிய நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டது. கம்மின்ஸ் 25 ரன்களுடனும், ஹேன்ட்ஸ் காம்ப் 28 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல் உள்ளனர். இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட ஆஸி அணி இன்னும் 386 ரன்கள் பின் தங்கி பாலோ ஆனை தவிர்க்க போராடி வருகிறது. இன்னும் 2 நாள் ஆட்டம் உள்ளதால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.