சபரிமலை விவகாரத்தில் தொடரும் பதற்றம் - மோடியின் கேரளா விசிட் ஒத்திவைப்பு!
சபரிமலையில் பெண்கள் தரிசனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து இந்து அமைப்புகள் நடத்தி வரும் போராட்டங்களால் கேரளாவில் பதற்றம் நீடிக்கிறது.
இந்நிலையில் நாளை கேரள மாநிலம் பத்தனம்திட்டாவில் பிரதமர் மோடி பங்கேற்பதாக இருந்த பா.ஜ.க. பொதுக் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் பா.ஜ.க சார்பில் மோடி பங்கேற்கும் பிரமாண்ட பேரணி, பொதுக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. தென் மாநிலங்களில் மோடியின் முதல் நிகழ்ச்சியாக பத்தனம்திட்டாவில் பிரமாண்ட பொதுக் கூட்டம் நாளை நடப்பதாக அறிவிக்கப்பட்டு ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தது. இந்நிலையில் சபரிமலை விவகாரத்தில் கேரளாவில் போராட்டங்களால் பதற்றம் நிலவுவதை அடுத்து மோடியின் நிகழ்ச்சி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
ஆனால் சபரிமலை விவகாரம் காரணமாக பொதுக் கூட்டம் ஒத்தி வைக்கப்படவில்லை என்றும், மோடியின் வேறு முக்கியநிகழ்ச்சிகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கேரள பா.ஜ.க. தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.