கருணாநிதி நினைவிடத்தில் கண்ணீர்.... கனிமொழியின் கவலையா? சபதமா?
என்னுடைய பிறந்தநாளுக்காக யாரும் சுவரொட்டிகளை ஒட்ட வேண்டாம் என உறுதியாகக் கேட்டுக் கொள்கிறேன்' என நேற்று கனிமொழி கூறியிருந்தார். இன்று யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல், கருணாநிதியில் சமாதியில் மௌனமாக நின்று கண்கலங்கியிருக்கிறார்.
திமுக மாநிலங்களவை உறுப்பினரான கனிமொழி, இன்று 51வது அகவையில் அடியெடுத்து வைத்திருக்கிறார். ஒவ்வோர் ஆண்டும் பிறந்தநாளின் போது கருணாநிதி காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவார். பிறகு தயாராக வைக்கப்பட்டிருக்கும் கேக்கை வெட்டுவார். அந்தக் கேக்கின் ஒரு துண்டை எடுத்து கனிமொழிக்கு ஊட்டிவிடுவார் கருணாநிதி. இதன்பிறகு உடன்பிறப்புகளின் வாழ்த்து மழையில் நனைவார் கனிமொழி. இந்தமுறை அவருக்கு வாழ்த்துச் சொல்லி கேக் ஊட்டுவதற்குக் கருணாநிதி இல்லை. கழகத்தின் நடவடிக்கைகளில் இருந்தும் படிப்படியாக ஒதுக்கப்படுவதை உணர்ந்து வைத்திருக்கிறார். முன்பெல்லாம் தலைமைக் கழகமான அறிவாலயத்தில் எந்தக் கூட்டம் நடத்தப்பட்டாலும், அதில் கனிமொழி பங்கேற்காமல் இருந்ததில்லை.
இப்போதெல்லாம் மருமகன் சபரீசனை முன்னிறுத்துகிறார் ஸ்டாலின். டெல்லியில் அவருக்காகத் தனியாக ஒரு அலுவலகமும் அமைத்துக் கொடுத்துவிட்டனர். பொதுவாக, திமுகவின் டெல்லி முகங்களாக முரசொலி மாறன், டிஆர்.பாலு, ஆ.ராசா, கனிமொழி என ஒவ்வொரு சீசனிலும் சிலர் இருப்பார்கள். இந்தமுறை சபரீசனை அந்த இடத்துக்குக் கொண்டு வர இருக்கிறார்கள். விரைவில் காலியாகப் போகும் ராஜ்யசபா சீட்டுக்கும் அவரை முன்மொழிந்துள்ளனர் ஸ்டாலின் குடும்பத்தினர். இந்தத் தகவல்களையெல்லாம் தன்னுடைய ஆட்கள் மூலம் அறிந்து வைத்திருக்கிறார் கனிமொழி. இருந்தாலும், தலைமையோடு சண்டையிடும் முடிவில் அவர் இல்லையாம். எது நடந்தாலும் தனக்கான இடத்தை ஒதுக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம். இதைப் புரிந்து கொண்ட ஸ்டாலினும், ' தூத்துக்குடி தொகுதி உனக்குத்தான். தேர்தல் வேலைகளைக் கவனி' எனக் கூறிவிட்டாராம்.
கருணாநிதி இருந்தவரையில் தனக்கு இருந்த மரியாதையும் அவர் மரணத்துக்குப் பிறகு தனக்குக் கிடைக்கும் முக்கியத்துவத்தையும் அவர் புரிந்து வைத்திருக்கிறார். அதனால்தான் திருச்சி சிவா உள்ளிட்டவர்கள் தன்னை சீண்டியதையும் வெளிக்காட்டாமல் மனதுக்குள் வைத்திருந்தார். இதைக் கேள்விப்பட்ட ஸ்டாலின், சிவாவை அழைத்துக் கடுமையாக டோஸ் விட்டார். தன் மீது அண்ணனுக்கு இந்தளவுக்குப் பாசம் இருக்கிறதே என மகிழ்ந்தார் கனிமொழி. இந்த ஆண்டு பிறந்தநாளுக்குக் கருணாநிதி இல்லாததால், அவருடைய சமாதிக்கே காலை 6.30 மணிக்குப் போனார் கனிமொழி. மனதில் உள்ள பாரத்தையெல்லாம் அங்கு கொட்டிவிட்டு சிஐடி காலனிக்குத் திரும்பியிருக்கிறார்.
-அருள் திலீபன்