செல்ஃபி மோகம்: அயர்லாந்தில் பலியான இந்திய மாணவர்
அயர்லாந்தில் மலை முகட்டில் தற்படம் எடுக்க முயன்ற இந்திய மாணவர் தடுமாறி உயிரிழந்துள்ளார். டிசம்பர் 4ம் தேதி வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி மாலை 3:15க்கு இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
அயர்லாந்தில் உள்ள மொஹர் மலைமுகடுகள் புகழ்பெற்ற சுற்றுலா தலமாகும். வெள்ளிக்கிழமை மாலை நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் இயற்கையை ரசித்துக்கொண்டும், மலைமுகடுகளில் உலாவிக் கொண்டும் இருந்தபோது இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.
மலைமுகட்டில் நின்றபடி செல்ஃபி எடுக்க முயன்ற இருபது வயதுக்கு மேற்பட்ட இளைஞர் ஒருவர் தவறி விழுந்துள்ளார். அயர்லாந்து கடலோர காவல்படையினர் அவரை காப்பாற்ற முயன்றுள்ளனர். கடலில் மிதந்த இளைஞரை மீட்டு கடலோர காவல்படை தளத்திற்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கே அவரை பரிசோதித்த மருத்துவர், ஏற்கனவே அந்த இளைஞர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த அந்த இளைஞர் டப்ளின் பல்கலைக்கழகத்தில் பயின்று வந்த இந்தியாவை சேர்ந்த மாணவராக இருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது.