ஐரோப்பிய ஒன்றியத்தின் கண்காணிப்பு வளையத்தில் இலங்கை!
அரசியல் நெருக்கடி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டிருந்தாலும், இலங்கையைத் தொடர்ந்தும் கண்காணித்துக் கொண்டிருப்பதாக ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.
கொழும்பில் உள்ள ஐரோப்பிய யூனியன் தூதரகத்தின் அதிகாரி ஒருவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.
ஐரோப்பிய யூனினுக்கு, இலங்கையில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு வழங்கப்பட்டிருந்த, ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகை, மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில், நிறுத்தப்பட்டது.
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை அடுத்து, ஐரோப்பிய ஒன்றியம் இந்தச் சலுகையை இடைநிறுத்தியிருந்தது.
எனினும், 2015 அதிபர் தேர்தலுக்குப் பின்னர், பதவிக்கு வந்த சிறிசேன – ரணில் கூட்டு அரசாங்கம், ஐரோப்பிய யூனியனுடன் நடத்திய பேச்சுக்களின் விளைவாக, 2017ஆம் ஆண்டு மே 19ஆம் தேதி ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகை மீண்டும் இலங்கைக்கு வழங்கப்பட்டது.
மனித உரிமைகள், தொழிலாளர் உரிமைகள், சூழல் பாதுகாப்பு, நல்லாட்சியுடன் சம்பந்தப்பட்ட 27 அனைத்துலக பிரகடனங்களுக்கு இணங்கிச் செயற்படுவதாக, இலங்கை அரசாங்கம் கொடுத்த வாக்குறுதிக்கு அமையவே, இந்த வரிச்சலுகையை ஐரோப்பிய யூனியன் மீண்டும் வழங்கியிருந்தது.
பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கவை, கடந்த அக்டோபர் 26ஆம் தேதி, அதிபர் மைத்திரிபால சிறிசேன, பதவி நீக்கி விட்டு, மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக நியமித்ததை அடுத்து, 52 நாட்களாக இலங்கையில் அரசியல் நெருக்கடி நிலை காணப்பட்டது.
இந்த அரசியல் நெருக்கடியின் போது, அரசியலமைப்புக்கு அமைய அனைத்து தரப்புகளும் செயற்படுமாறும் இல்லாவிட்டால், இலங்கைக்கு வழங்கப்பட்டிருந்த ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை நிறுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை செய்திருந்தது.
எனினும், மீண்டும் ரணில் விக்ரமசிங்க பிரதமராக நியமிக்கப்பட்டு, சட்டபூர்வமான அரசாங்கம் மீண்டும் ஏற்படுத்தப்பட்டதை அடுத்து, இலங்கையில் அரசியல் நெருக்கடி முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள போதும், தமது கண்காணிப்பை கைவிடப் போவதில்லை என்று ஐரோப்பிய ஒன்றியம் கூறியிருக்கிறது.
இலங்கை அரசாங்கம் வெளியிட்ட இணக்கப்பாடு நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்பது தொடர்பாக, ஆண்டுக்கு இரண்டு முறை மேற்கொள்ளப்படும் மதிப்பீடு இந்த ஆண்டும் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று, கொழும்பில் உள்ள ஐரோப்பிய யூனியன் அதிகாரி ஒருவர், தெரிவித்துள்ளார்.
இந்தக் கண்காணிப்பு மதிப்பீட்டை மேற்கொள்வதற்கான நாள் எதுவும் குறிக்கப்படவில்லை. எனினும், இந்த ஆண்டு மதிப்பீட்டுப் பணிகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த மதிப்பீடுகளை மேற்கொள்வதற்காக, ஐரோப்பிய யூனியனின் குழுவொன்று இலங்கைக்கு வரவுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.