சிறிசேன படுகொலை சதித்திட்டம் - விசாரணையில் திருப்பம்

இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன உள்ளிட்டவர்களை படுகொலை செய்யும் சதித் திட்டம் தொடர்பாக நாமல் குமாரவின் அலைபேசிப் பதிவுகளில் எந்தத் தகவல்களும் கிடைக்கவில்லை என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இலங்கை அதிபர் சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்ட உயர்மட்ட பிரமுகர்கள் சிலரை படுகொலை செய்யும் சதித்திட்டம் ஒன்று தொடர்பாக, கடந்த ஆண்டில் தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார், நாமல் குமார என்ற செயற்பட்டாளர்.

தன்னைத் தானே ஊழல் எதிர்ப்புச் செயலணியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எனக் கூறிக் கொள்ளும் அவர் கடந்த ஆண்டு செப்ரெம்பர் மாதம், காவல்துறையின் தீவிரவாத எதிர்ப்பு பிரிவின் பணிப்பாளர் நாலக சில்வாவுடன் நடத்திய உரையாடல் தொடர்பான சில ஒலிப்பதிவுகளையும் வெளியிட்டார்.

அதிபர் சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்டவர்களை பாதாள உலக குழுவைச் சேர்ந்த ஒருவர் மூலம் கொலை செய்வதற்கு பொலிஸ் அதிகாரி நாலக சில்வா பேரம் பேசினார் என்றும், இந்த சதித்திட்டம் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அமைச்சர் சரத் பொன்சேகா உள்ளிட்டவர்களுக்கும் தெரியும் என்றும் அவர் தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதையடுத்து, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்து, பொலிஸ் அதிகாரி நாலக சில்வாவை கைது செய்து காவலில் வைத்துள்ளனர். கேரளாவைச். சேர்ந்த தோமஸ் என்ற இந்தியப் பிரஜையும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார்.

படுகொலை சதித் திட்டம் குறித்த தகவல்களை வெளியிட்ட நாமல் குமார, தனது அலைபேசியில் இருந்த தகவல்கள் பல அழிக்கப்பட்டுள்ளதாகவும், அதனை மீளப்பெற்றால், இந்த சதித்திட்டம் தொடர்பான மேலும் பல இரகசியங்கள் வெளிவரும் என்றும் கூறியிருந்தார்.

இதையடுத்து, நாமல் குமாரவின் அலைபேசியை ஹொங்கொங்கிற்கு எடுத்துச் சென்ற புலனாய்வு அதிகாரிகள், அதில் அழிக்கப்பட்டிருந்த குரல் பதிவுகளை மீட்டு வந்து விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணை தொடர்பான நீதிமன்றத்தில் குற்றப் புலனாய்வுத் துறையினரால் இரகசிய அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதிபர் சிறிசேனவையோ, கோத்தாபய ராஜபக்சவையோ படுகொலை செய்வதற்கான சதித்திட்டம் தொடர்பான என்ற தகவல்களும், அலைபேசியில் இருந்து அழிக்கப்பட்ட உரையாடல்களில் இல்லை என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக அறியப்படுகிறது.

தன்னைப் படுகொலை செய்யும் சதித் திட்டத்துடன் அமைச்சராக இருந்த சரத் பொன்சேகாவுக்கு தொடர்பு இருந்தது என்றும், இந்த சதித் திட்டம் குறித்து முறையான விசாரணைகளை நடத்த தவறியதால் தான் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தை பதவி நீக்கம் செய்ததாகவும், அதிபர் சிறிசேன கடந்த நவம்பர் மாதம் கூறியிருந்தார்.

படுகொலைச் சதித் திட்ட விசாரணைகள் முடியும் வரை, ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்திடம், பொலிஸ் திணைக்களத்தை உள்ளடக்கிய சட்டம், மற்றும் ஒழுங்கு அமைச்சையும் வழங்கப் போவதில்லை என்றும் அதிபர் சிறிசேன கூறிவருகிறார்.

இந்த நிலையில், படுகொலைச் சதித் திட்டம் தொடர்பான விசாரணைகளின் முடிவுகள், அதிபர் சிறிசேனவுக்கு அரசியல் பின்னடைவுகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News >>