உ.பி.யில் செல்வாக்கே இல்லாத காங்கிரசை கூட்டணியில் சேர்த்து பலனில்லை - சமாஜ்வாதி கட்சி கிண்டல்!

உ.பி.யில் பா.ஜ.க.வை வீழ்த்த பகுஜன் - சமாஜ்வாதி கட்சிகளின் கூட்டணியே போதும். செல்வாக்கு இல்லாத காங்கிரசை கூட்டணியில் சேர்த்தால் ஒரு பலனும் கிடைக்காததுடன், காங்கிரசை சேர்த்தால் பா.ஜ.க.வுக்கு சாதகமாகவும் போக வாய்ப்புள்ளது என்று சமாஜ்வாதி கட்சி அறிவித்துள்ளது.

வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைவர் ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி மெகா கூட்டணி அமைக்க மாயாவதியும், அகிலேஷ் யாதவும் மறுத்து விட்டனர். தொடர்ந்து கடந்த சில நாட்களாக பல கட்டங்களாக ரகசிய பேச்சு நடத்திய மாயாவதியும், அகிலேஷூம் உ. பி.யில் கூட்டணிக்கான உடன்பாட்டை இறுதி செய்து விட்டனர். 80 தொகுதிகள் கொண்ட உ.பி.யில் இருவரும் சரிசமமாக 37 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளனர்.

ராகுல் மற்றும் சோனியாவின் அமேதி, ரேபரேலி தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்துவது இல்லை எனவும், எஞ்சிய 4 தொகுதிகளை சிறிய கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்குவதென முடிவாகி உள்ளது. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் 15-ந் தேதி வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரசை கூட்டணியில் சேர்க்காததற்கு ராஜஸ்தானிலும், ம.பி.யிலும் சட்டமன்ற தேர்தல் கூட்டணி வைப்பதில் பகுஜன், சமாஜ்வாதி கட்சிகளுக்கு ஏற்பட்ட கசப்பான சம்பவங்களே காரணம் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து சமாஜ்வாதி கட்சியின் தேசிய துணைத் தலைவர் கிரண்மாய் நந்தா கூறுகையில், உ.பி.யில் செல்வாக்கே இல்லாத காங்கிரசை கூட்டணியில் சேர்த்து ஒரு பலனும் இல்லை.

பா.ஜ.க.வை வீழ்த்த எங்கள் இரு கட்சிகளுமே போதும். காங்கிரசை கூட்டணியில் சேர்த்தால் பா.ஜ.கவுக்கு ஆதாயமாகி விடும் வாய்ப்பும் உள்ளது. மேலும் காங்கிரஸ் வலுவாக உள்ள மாநிலங்களில் பிற கட்சிகளை துச்சமாக மதித்து சீட் ஒதுக்க கறார் காட்டும் போது உ.பி.யில் செல்வாக்கு இழந்துவிட்ட காங்கிரஸ் கூடுதல் தொகுதிகளை கேட்பது என்ன நியாயம் என்றார். மேலும் பிரதமர் போட்டியில் மாயாவதியோ, அகிலேஷ் யாதவோ இல்லை என்றும் தேர்தல் முடிவுகளுக்குப் பின் பிரதமரை தேர்வு செய்வதில் இருவரின் பங்கு முக்கியமானதாக இருக்கும் என்றும் நந்தா தெரிவித்கள்ளார்.

More News >>