மகிந்தவுக்கு எதிரான போராட்டத்தில் இருந்து விலகுகிறார் சம்பந்தன்

இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பாக, சபாநாயகர் கரு ஜெயசூரியவின் அதிகாரபூர்வ அறிவிப்புக்காக காத்திருப்பதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் சபாநாயகரின் இறுதியான முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவது குறித்த முடிவை எடுப்பேன். என்றும் அவர் கூறியுள்ளார்.

அண்மையில் அரசியல் நெருக்கடிகள் முடிவுக்கு வந்த பின்னர், மகிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராக, சபாநாயகர் கசரு ஜெயசூரிய அறிவித்த பின்னர், எதிர்க்கட்சித் தலைவரின் செயலகங்களைப் பயன்படுத்துவதில் இருந்து தாம் விலகியிருப்பதாகவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்திலும், வெளியிலும் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் செயலகங்களைத் தான் பயன்படுத்துவதில்லை எனவும், அதனால் எந்த மோதல்களோ, சிக்கல்களோ ஏற்படாது என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த மாதம் மகிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராக அறிவித்த சபாநாயகர், இரா.சம்பந்தனை அந்தப் பதவியில் இருந்து நீக்குவது பற்றிய அறிவிப்பை வெளியிடவில்லை.

இதனால், இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் நாடாளுமன்றத்தில் இருப்பதாக உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

அத்துடன், மகிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க முடியாது என்றும், இதுகுறித்து ஆராய தெரிவுக்குழு ஒன்றை நியமிக்குமாறும், சபாநாயகரிடம் கோரியிருந்தனர்.

இந்தக் கோரிக்கை தொடர்பான சபாநாயகர் இன்னமும் தமது முடிவை அறிவிக்கவில்லை. இதனால், எதிர்க்கட்சித் தலைவர் செயலகம் இன்னமும் இரா.சம்பந்தனின் கையிலேயே உள்ளது.

அதேவேளை, மகிந்த ராஜபக்சவின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தாங்கள் இரண்டு, அடிப்படைகளில் சவாலுக்குட்படுத்தியுள்ளோம் என்று சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

முதலாவது, “அவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவர். அந்தக் கட்சியின் தலைவரான அதிபர் மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்தில் அங்கம் வகிக்கிறார். அமைச்சரவையின் தலைவராக இருக்கும் அவர் பல அமைச்சுக்களை கைவசம் வைத்திருக்கிறார்.

மேலும் பல ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்கள் ஆளும்கட்சிக்கு தாவி அரசாங்கத்துடன் இணைந்துள்ளனர். அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் கட்சியைச் சேர்ந்தவர் எதிர்க்கட்சித் தலைவராக இருக்க முடியாது. என்ற அடிப்படையில் அவரது நியமனத்தை எதிர்க்கிறோம்.”

இரண்டாவதாக, அதிபர் சிறிசேன நாடாளுமன்றத்தைக் கலைத்த பின்னர், மகிந்த ராஜபக்ச சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் இணைந்து கொண்டார். அதற்குப் பின்னரும் அவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து விலகவில்லை.

ஒருவர், இரண்டு அரசியல் கட்சிகளில் அங்கம் வகிக்க முடியாது. அரசியல்சட்டத்தின்படி, அவர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இருந்து விலகியிருந்தால், கட்சியில் இருந்து வெளியேறிய 30 நாட்களில், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவார். அதனால் மகிந்த ராஜபக்ச எதிர்க்கட்சித் தலைவராக நீடிக்க முடியாது” என்றும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கடந்த கடந்த வெள்ளிக்கிழமை நடத்திய கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், மகிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராக ஏற்றுக்கொண்ட தமது முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்திருந்தார்.

அதற்கு ஆளும்கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களான லக்ஸ்மன் கிரியெல்ல, மனோ கணேசன், ரவூப் ஹக்கீம் ஆகியோர் எதிர்ப்பை தெரிவித்தனர்.

எனினும், சபாநாயகர் கரு ஜெயசூரிய தனது முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்றும், மகிந்த ராஜபக்சவின் நாடாளுமன்ற உறுப்புரிமை தொடர்பாக, தேவைப்படின் நீதிமன்றத்தை நாடி தீர்வைப் பெறுமாறும் கூறியிருந்தார்.

இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் எவரும் கலந்து கொள்ளவில்லை.

அதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பாக எதிர்வரும், 8ஆம் தேதி, சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார் என்று, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையிலேயே, நாளை மறுநாள் நடக்கவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தில், எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பாக, சபாநாயகர் தனது அதிகாரபூர்வ முடிவை அறிவிக்கவுள்ளார்.

இதன்போது, இரா.சம்பந்தன் வகித்து வந்த எதிர்க்கட்சித் தலைவர் பதவி மகிந்த ராஜபக்சவுக்கு, வழங்கப்படும்.

அதேவேளை, எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக தாங்கள் நீதிமன்றத்துக்குச் செல்லப் போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசாவும் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>