எச்.ஏ.எல் குறித்து பொய்யான தகவல்? நிர்மலா சீத்தாராமனுக்கு ராகுல் காந்தி சவால்!
பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்டுக்கு ரூ 1 லட்சம் கோடிக்கு பா.ஜ.க அரசு ஒப்பந்தம் வழங்கியதாக ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன்கூறியதற்கு ஆதாரத்தை தாக்கல் செய்ய முடியுமா? என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சவால் விட்டுள்ளார்.
ஆதாரத்தை நாளையே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் ராகுல் கண்டிப்பு காட்டியுள்ளார். ரபேல் ஒப்பந்த விவகாரத்தில் மோடி அரசுக்கு கடும் நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகிறது காங்கிரஸ். இது தொடர்பாக 3 நாட்களாக நாடாளு ம ன்றத்தில் விவாதம் அனல் பறந்தது.
கேள்வி மேல் கேள்வி கேட்டு திக்குமுக்காடச் செய்தார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. உள்நாட்டில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்காமல் அம்பானிக்கு வழங்கி யது ஏன் என்றும் ராகுல் கேள்வி எழுப்பினார்.கடந்த வெள்ளிக்கிழமை விவாதத்திற்கு பதிலளித்துப் பேசிய நிர்மலா சீதாராமன் இந்துஸ்தான் நிறுவனத்திற்கு பா.ஜ.க அரசு 1 லட்சம் கோடி ரூபாய்க்கு பல்வேறு ஒப்பந்தங்களை வழங்கியதாகத் தெரிவித்தார். ஆனால் இதனை எச்.ஏ.எல். நிறுவனம் உடனடியாக மறுத்ததுடன், ஒரு நயா பைசா அளவுக்கு கூட ஒரு ஒப்பந்தமும் மத்திய அரசு வழங்கவில்லை.
ஊழியர்களின் சம்பளத்திற்கு ரூ. 1000 கோடி அளவுக்கு கடன் வாங்க வேண்டிய அவலத்தில் உள்ளதாக உண்மையை போட்டு உடைத்து விட்டது. இந்த விவகாரம் இப்போது நிர்மலா சீத்தாராமனுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். ரபேல் விவகாரத்தில் பிரதமர் மோடியைக் காப்பாற்றுவதற்காக பொய் மேல் பொய்யாக நிர்மலா சீத்தாராமன் கட்டவிழ்த்து விடுகிறார். எச்.ஏ.எல். நிறுவனத்திற்கு ரூ 1000 கோடி ஒப்பந்தம் வழங்கியதாக கூறியதும் பொய் என்று அம்பலமாகிவிட்டது.
நிர்மலா சீத்தாராமன் தான் கூறியதை ஆதாரங்களுடன் நாடாளுமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். தவறினால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்து விட்டு போகட்டும் என்று காட்டமாகத் தெரிவித்தார். இந்த விவகாரத்தால் நாளையும் நாடாளுமன்றத்தில் அனல் பறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.