திருநெல்வேலியில் 1800 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் கைப்பற்றப்பட்டன
நெகிழியால் செய்யப்பட்ட பைகள், குவளைகள் போன்ற பொருள்களை 2019 புத்தாண்டு தினம் முதல் பயன்படுத்துவதற்கு தமிழக அரசு தடைவிதித்துள்ளது. அதிகாரிகள் கடைகளில் ஆய்வு செய்து தடைசெய்யப்பட்ட பொருள்களை கைப்பற்றி வருகின்றனர்.
திருநெல்வேலியில் இதுபோன்ற நடவடிக்கையில் ஜனவரி 1ம் தேதி முதல் 1.8 மெட்ரிக் டன் (1,800 கிகி) நெகிழி பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் (பொறுப்பு) வி. நாராயணன் நாயர் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலி, பாளையங்கோட்டை, தச்சநல்லூர், மேலப்பாளையம் ஆகிய பகுதிகளில் அதிகாரிகள் குழு ஆய்வு நடத்தியது. டிசம்பர் 4ம் தேதி, வெள்ளிக்கிழமையன்று பாளையங்கோட்டை மார்க்கெட், திருச்செந்தூர் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகள், உணவகங்கள், வணிக நிறுவனங்களிலும் டிசம்பர் 5ம் தேதி சனிக்கிழமையன்று மேலப்பாளையம் மற்றும் பாளையங்கோட்டை பகுதிகளிலும் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. பிளாஸ்டிக் கேரி பேக்குகள் மற்றும் தெர்மோகோல் தட்டுகள் போன்றவை இந்த நடவடிக்கையில் கைப்பற்றப்பட்டன.
உணவுப் பொருள்களை பார்சல் செய்யப் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் ஷீட்டுகள், சாப்பிடும் மேசைகளில் விரிக்கப்படும் பிளாஸ்டிக் ஷீட்டுகள், பிளாஸ்டிக் மற்றும் தெர்மோகோலால் செய்யப்பட்ட சாப்பிடும் தட்டுகள், பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட காகித குவளைகள், பிளாஸ்டிக்கால் ஆன தேநீர் மற்றும் ஏனைய குவளைகள் (கப்), தெர்மோகோல் குவளைகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பானங்களை அருந்தும் பிளாஸ்டிக் ஸ்ட்ராக்கள், எல்லா அளவு மற்றும் தடிமன் கொண்ட பிளாஸ்டிக் மற்றும் பிளாஸ்டிக் முலாம் பூசப்பட்ட கேரி பைகள், பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட கொடிகள், நெய்யப்படாத பைகள் ஆகிய 14 பொருள்களை பயன்படுத்த தடை உள்ளது.
திருநெல்வேலி பகுதியில் 1,800 கிகி பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் கன்னியாகுமரியிலுள்ள அதிகாரிகள் குளச்சல், நாகர்கோவில், பத்மநாபபுரம், ஆசாரிபள்ளம் ஆகிய பகுதிகளில் ஆய்வு நடத்தி தடைசெய்யப்பட்ட பொருள்களை கைப்பற்றியதோடு 62,000 ரூபாய் அபராதமும் விதித்துள்ளனர்.
பொதுமக்கள் தாங்களாகவே பிளாஸ்டிக் பொருள்களை புறக்கணிக்க ஆரம்பித்து விட்டனர். இது நல்ல அறிகுறியாகும் என்று திருநெல்வேலி மாநகர் பொறுப்பு ஆணையர் கூறியுள்ளார்.