யார் பொய் சொல்வது..? ஆதாரங்கள் இதோ..! ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் எதிர் சவால்!
எச்.ஏ.எல். நிறுவனத்துக்கு ஒப்பந்தம் வழங்கியதற்கான ஆதாரங்களை வெளியிட்டு ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் ராகுல் காந்திக்கு எதிர் சவால் விடுத்துள்ளார்.
நாட்டுக்கு தவறான தகவல் தந்து திசை திருப்பப் பார்ப்பது வெட்கக்கேடு என்றும், நாடாளுமன்றத்தில் மன்னிப்புக் கேட்பதுடன் ராகுல் காந்தி தமது எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்ய வேண்டும் என நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார்.
எச்.ஏ.எல். நிறுவனத்துக்கு ரூ ஒரு லட்சம் கோடிக்கு ஒப்பந்தம் வழங்கியதாக பொய்யான தகவலை நிர்மலா சீதாராமன் கூறியதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். மேலும் அதற்கான ஆதாரங்களை நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய வேண்டும் . இல்லாவிட்டால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் ராகுல் கூறியிருந்தார். ராகுல் பேட்டி வெளியான சிறிது நேரத்தில் நிர்மலா சீதாராமன் டிவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். அதில் 2014 முதல் எச்.ஏ.எல். நிறுவனத்துக்கு காண்ட்ராக்ட் வகையில் 26,570 கோடியும், பைப் லைன் வகையில் 73,000 கோடியில் ஒப்பந்தம் வழங்கியதற்கான ஆதாரம் இதோ என்று விபரங்களை பதிவிட்டுள்ளார்.
உண்மை தெரியாமல் பொய் பேசும் ராகுல் காந்தியின் செயல் வெட்கக்கேடானது. தவறான தகவல்களால் நாட்டின் கவனத்தை திசை திருப்ப முயல்கிறார். பொய்யான குற்றச்சாட்டுக்காக நாடாளுமன்றத்தில் ராகுல் மன்னிப்பு கோருவதுடன் எம்.பி.பதவியையும் ராஜினாமா செய்யத் தயாரா? என்று எதிர் சவால் விடுத்துள்ளார்.