திருவாரூர் தேர்தல் ஒத்திவைப்பு! தேர்தல் ஆணைய அறிவிப்புக்கு பெரும்பான்மை கட்சிகள் வரவேற்பு - அமமுக எதிர்ப்பு!

திருவாரூரில் வரும் 28-ந் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட இடைத் தேர்தலை ரத்து செய்துள்ளது தேர்தல் ஆணையம்  இதற்கு திமுக, அதிமுக, காங்., பா.ஜ.க., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.அம முக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

திருவாரூர் இடைத் தேர்தலை திடீரென தேர்தல் ஆணையம் அறிவித்தது முதலே சர்ச்சைகளும் எழுந்தன. கஜாபுயல் பாதிப்பிலிருந்து இன்னும் மக்கள் மீளவில்லை. உரிய நிவாரணமும் வழங்காத நிலையில் தேர்தல் தேவைதானா? என்று வேறு தரப்பிலும் தேர்தல் ஆணையத்துக்கு எதிர்ப்பு கிளம்பியது.

உச்ச நீதிமன்றத்திலும் இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி.ராஜா உட்பட 3 பேர் வழக்கும் தொடர்ந்தனர். இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அவசர கதியில் நடவடிக்கைகளை மேற்கொண்டது. தேர்தல் நடத்துவது குறித்து திருவாரூரில் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தி அறிக்கை அளிக்குமாறு அம் மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட கடந்த சனிக்கிழமை கூட்டம் நடத்தப்பட்டது.

கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துக் கட்சியினரும் தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்தனர். மாவட்ட தேர்தல் அதிகாரியின் அறிக்கையைப் பெற்ற இந்திய தலைமை தேர்தல் ஆணையம் நேற்று நள்ளிரவு தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தையும் ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

திருவாரூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு அதிமுக, திமுக, காங்., பா.ஜ.க., கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் ஆணைய செயல்பாடுகளை விமர்சித்ததுடன், தேர்தல் ரத்து செய்யப் பட்டதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளன. அமமுக தரப்பில் அதிர்ச்சியும், கண்டனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திடீரென தேர்தலை அறிவித்து பின்னர் ஒரே வாரத்தில் ரத்து செய்த தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

More News >>