சிட்னி டெஸ்ட் டிரா: மழையால் பறிபோனது இந்தியாவின் வெற்றி வாய்ப்பு - தொடரை வென்று இந்தியா சாதனை !
சிட்னி டெஸ்டில் மழை காரணமாக கடைசி நாள் ஆட்டம் கைவிடப்பட்டு போட்டி டிராவானது. பிரகாசமான இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பறிபோனாலும் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்தது இந்தியா.
ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. கடைசி மற்றும் 4 - வது போட்டி சிட்னியில் நடந்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் அபாரமாக ஆடி 7 விக்கெட் இழப்புக்கு 622 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
தொடர்ந்து ஆடிய ஆஸி.அணி முதல் இன்னிங்சில் 300 ரன்களுக்கு ஆட்டமிழந்து பாலோ - ஆன் ஆனது. 322 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடர்ந்த ஆஸி.அணி விக்கெட் இழப்பின்றி 6 ரன்கள் எடுத்திருந்த போது மழை காரணமாக 4-ம் நாள் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இன்றும் மழை தொடர்ந்ததால் ஒரு பந்து கூட வீசாமலே ஆட்டம் கைவிடப்பட்டு டிராவானதாக அறிவிக்கப்பட்டது. மழையால் ஆஸி.அணி தோல்வியிலிருந்து தப்பியது. இருந்தாலும் 2 - 1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றிருந்த இந்தியா தொடரைக் கைப்பற்றியது.
இரு அணிகளுக்கு இடையேயான 71 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆஸ்திரேலிய மண்ணில் முதல் தடவையாக தொடரை வென்ற சாதனையைப் படைத்தது இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடரில் அபாரமாக ஆடி ரன்களைக் குவித்த இந்திய வீரர் புஜாரா சிட்னி போட்டியின் ஆட்ட நாயகன் விருதையும், தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.