பொன்முடி சீரியஸ்? கேரள சிகிச்சையால் கலங்கும் ஆதரவாளர்கள்

மு.க.ஸ்டாலினின் குட்புக்கில் பொன்முடிக்குப் பதில் எ.வ.வேலுவின் ஆதிக்கம் கோலோச்சுவதால், அண்ணா அறிவாலயம் பக்கம் தலைகாட்டாமல் இருக்கிறார் பொன்முடி. திராவிடர் கழகத் தலைவர் வீரமணி மூலமாகக் கட்சிக்குள் வந்தாலும் அவருக்கும் தி.க கொள்கைகளுக்கும் சம்பந்தம் இல்லை. சிலரது தூண்டுதலால் கட்டம் கட்டப்பட்டிருக்கிறார் பொன்முடி என்கிறார்கள் திமுகவினர்.

தமிழக முன்னாள் கல்வி அமைச்சர் பொன்முடி, கருணாநிதிக்கும் ஸ்டாலினுக்கும் நம்பிக்கைக்குரிய ஒருவராக இருந்தவர். கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் அதிகாரமையமாக வலம் வந்தவர்.

கடந்த சில வாரங்களாக பொன்முடிக்கும் ஸ்டாலினுக்கும் இடையில் சரியான உறவு இல்லை. விழுப்புரம் மாவட்டத்தில் எம்.எல்.ஏ மஸ்தான் இல்லத்தின் திருமண விழாவில், ஸ்டாலின் அப்பாயிண்மென்ட்டை எ.வ.வேலு வாங்கிக் கொடுத்ததுதான் சண்டைக்குப் போடப்பட்ட முதல் பிள்ளையார் சுழி.

இந்த சண்டையை வேண்டும் என்றே வேடிக்கை பார்த்தாராம் ஸ்டாலின். ' ஆளும்கட்சியினர் ஆதரவோடு பொன்முடி வாரிசுகள் நிழல் பிசினஸ் நடத்துவதும் குறிப்பாக, கனிமவளத்தில் வாரிச்சுருட்டுவதும்தான் தளபதியின் கோபத்தைக் கிளறிவிட்டுவிட்டது' என்கிறார்கள் உடன்பிறப்புகள் வட்டாரத்தில்.

பொன்முடி ஓரம்கட்டப்பட்டதைப் பற்றிப் பேசும் பொறுப்பாளர்கள், விழுப்புரம் மாவட்டத்தையே தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் பொன்முடி. அவருக்கு உடல்நிலை சற்று பாதிப்படைவதைக் கண்ட ஸ்டாலின், எ.வ.வேலுவுக்கு சிக்னல் கொடுத்துவிட்டார்.

இந்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொள்ளும் முனைப்போடு தலைகாட்டத் தொடங்கினார் வேலு. இதனை பொன்முடியின் மகனான கவுதம் சிகாமணி விரும்பவில்லை.

தலைமை தூண்டிவிடுவதாகச் சந்தேகித்தனர். இத்தனை உழைத்தும் இவ்வளவுதான் மதிப்பா என பொன்முடியும் அமைதியாகிவிட்டார். அதனால்தான், கட்சி நிகழ்ச்சி, அண்ணா அறிவாலய நிகழ்ச்சி, மாவட்ட செயலாளர்கள் கூட்டம் என அனைத்தையும் புறக்கணித்துவிட்டார் பொன்முடி.

ஸ்டாலின் வாரிசும் குடும்பமும் வேலுவையே நம்புகிறார்கள். வேலுவை எதிர்த்துப் பேச உள்கட்சிக்குள் யாரும் தயாராக இல்லை என்பதையும் பொன்முடி அறிந்து வைத்திருக்கிறார்.

இதனால் அவரது உடல்நிலை மேலும் பாதிக்கப்பட்டு சீரியஸ் நிலையில் இருக்கிறார்.

இதற்காக கேரளாவில் உள்ள மருத்துவ சிகிச்சை மையம் ஒன்றில் தங்கியிருக்கிறார். அங்கிருந்தபடியே மாவட்டத்தில் நடப்பதைக் கேட்டு அறிகிறார். 'அவரது உடல்நிலை சீராகி, மீண்டும் கட்சிப் பணிக்குத் திரும்ப வேண்டும்' என வேண்டிக் கொண்டிருக்கிறார்கள் அவரது ஆதரவு பொறுப்பாளர்கள்.

-அருள் திலீபன்

More News >>