மாதம்தோறும் 2 செட்டில்மெண்ட்.. மத்திய அமைச்சருக்கு ரூட் போட்டுக் கொடுத்த கொங்கு பாஜக புள்ளி
தமிழக அமைச்சர்களின் நம்பிக்கைக்குரிய தளகர்த்தராக இருக்கிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். பன்னீர்செல்வத்தை ஓரம்கட்டி டெல்லி தொடர்புகளை 'மணி' தரப்புக்குக் காட்டியதில் வானதி சீனிவாசனின் பங்கு அதிகமாம்.
கும்பகோணத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் நிர்மலா சீதாராமன். அவருக்கு இருக்கும் ஒரே ஆசை, எப்படியாவது தமிழ்நாட்டு அரசியலில் கோலோச்ச வேண்டும் என்பது. இதற்காக தமிழிசையை ஓரம்கட்டிவிட்டு வானதியின் நட்பைக் கொண்டாடினார்.
தமிழ்நாட்டுக்கு வந்தால் அவருடன் வானதி இருப்பார். இவர்களது சந்திப்பில் பேசப்படும் விவரங்களை தன்னுடைய சோர்ஸுகள் மூலம் அறிந்து வந்தார் டாக்டர்.தமிழிசை.
இந்த நட்பையே அடிப்படையாக வைத்து தமிழக பாஜக தலைவர் பதவிக்கும் முயற்சி செய்து வந்தார் வானதி. ஆனால், மோடியின் நட்பு வட்டத்தில் இருக்கும் குஜராத் அதிகாரிகள் சிலர் தமிழிசையைக் காப்பாற்றி வந்தனர்.
அவரால் கட்சியை வளர்க்க முடியவில்லை என எச்.ராஜாவும் வானதியும் புகார் மேல் புகார் அனுப்பினாலும், தமிழிசை மோடிஜி விசுவாசி' எனத் தகவல் வருகிறதாம். அதனால்தான் பலமுறை தமிழிசை மாற்றப்படுவார் எனத் தகவல் வெளியாகியும், அவரை யாராலும் நெருங்கக் கூட முடியவில்லை.
இதனால் கடுப்பாகி, தமிழிசை பற்றிப் போட்டுக் கொடுப்பதையே மறந்துவிட்டனர்.
பேட்டி, தலைவர்கள் சந்திப்பு என நாளொன்றுக்கு சராசரியாக ஊடகங்களில் காட்சி தருகிறார் தமிழிசை. மற்றவர்களோ ஆளும்கட்சியோடு பிசினஸ் தொடர்பை வளர்த்துக் கொண்டு வருகிறார்கள்.
அதில், கொங்கு மந்திரிகளின் துணையோடு வானதி நடத்தும் தர்பாரைப் பற்றி டெல்லியின் காதில் ஓதியிருக்கிறார் தமிழிசை. ' மாதம்தோறும் மாமூல் வாங்கிக் கொள்கிறார்கள். உங்கள் பெயரைச் சொல்லித்தான் வசூல் செய்கிறார்கள். இங்குள்ள ஆளும்கட்சிக்கு டெல்லி ஆட்களைத் தெரியாததை தங்களுக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டு செயல்படுகின்றனர். இதனால் கட்சிக்குத்தான் கெட்ட பெயர் ஏற்படுகிறது.
கோவையில் உள்ள பல வர்த்தக நிறுவனங்களில் இவர்கள் மறைமுகமாக இயங்குகிறார்கள்' என்றெல்லாம் டெல்லி பிரமுகர்கள் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.
உண்மையில், டெல்லியில் உள்ள முக்கிய மந்திரி ஒருவருக்கு மாதம்தோறும் 2 செட்டில்மெண்டுகளை அனுப்புகிறார்களாம். இதற்குப் பக்கபலமாக இருப்பது பாஜக நிர்வாகிகள் சிலர் தானாம்.
-அருள் திலீபன்