மேற்குலக நாடுகளே எனது அரசாங்கத்தை கவிழ்த்தன மகிந்த ராஜபக்சே குற்றச்சாட்டு

தமது அரசாங்கத்தைக் கவிழ்ப்பதில் மேற்குலக நாடுகளின் இராஜதந்திர தூதரகங்கள் முக்கிய பங்காற்றியுள்ளன என்று இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த அக்டோபர் 26ஆம் தேதி, இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல், 51 நாட்களின் பின்னர் பதவியில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டது.

தற்போது, இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள மகிந்த ராஜபக்ச, கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு நீண்ட பேட்டியை அளித்துள்ளார்.

அதில், தமது அரசாங்கத்தைக் கவிழ்ப்பதில் மேற்குலக இராஜதந்திர தூதரகங்கள் முக்கிய பங்காற்றியதாக மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.

“அவர்களின் தலையீட்டை நாங்கள் மிகவும் தெளிவாகப் பார்த்தோம். நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்ட போது, பார்வையாளர் அரங்கில் இருந்த வெளிநாட்டு இராஜதந்திரிகள், எப்படி கைதட்டி வரவேற்றனர் என்பதை கண்டோம்.

துள்ளிக் குதித்த அவர்கள், அந்தக் காட்சிகளை படம் பிடித்துக் கொண்டனர். இவையெல்லாம் நாடாளுமன்றத்துக்குள் நடந்தன. அவர்கள் எந்தப் பக்கம் நின்றார்கள் என்பதை அது தெளிவுபடுத்தியது.” என்று கூறியுள்ளார்.

அது வெளிநாட்டுத் தலையீடு இருந்தது என்பதைக் குறிக்கிறதா என மீண்டும் எழுப்பிய கேள்விக்கு மகிந்த ராஜபக்ச பதிலளிக்கையில்,

“ஆம், அது ஒரு தலையீடு தான். இப்போதைய அரசாங்கத்தை அவர்கள் தான் உருவாக்கினார்கள். என்னைத் தோற்கடிப்பதிலும் கூட அவர்கள் தலையிட்டார்கள்.

என்னைத் தோற்கடிப்பதற்காக பணத்தைச் செலவிட்டதை சில நாடுகள் ஏற்றுக் கொண்டன. பொதுவாக அவர்கள் அதனைக் குறிப்பிட்டார்கள். அத்தகையவர்கள் இந்த அரசாங்கத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு தமக்கு இருப்பதாக நினைத்திருக்கலாம்” என்றும் தெரிவித்துள்ளார்.

More News >>