கொழும்பில் உயிருடன் எரிக்கப்பட்ட சார்லி நாய் அலரி மாளிகைக்கு முன் திரண்ட ஆர்வலர்கள்
இலங்கையில் விலங்குகள் நலன்புரிச் சட்டம் ஒன்றைக் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தி, கொழும்பில் உள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அலரி மாளிகைக்கு முன்பாக, நேற்று போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு பகுதியில் கடந்த டிசெம்பர் 31ஆம் தேதி இரவு, சார்லி என்ற நாய், கூண்டுக்குள் வைத்து தீயிட்டு எரிக்கப்பட்டது. கடுமையான எரிகாயங்களுடன் மீட்கப்பட்ட இந்த நாய், பின்னர் மரணமானது. இந்தச் சம்பவம் விலங்குகள் நல ஆர்வலர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியிருந்தது.
இதையடுத்து, சார்லி என்ற நாயை தீயிட்டு கொளுத்தினார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், 38 வயதுடைய ஒருவரை பெரியமுல்ல என்ற இடத்தில் நேற்றுமுன்தினம்ட கைது செய்த நீர்கொழும்பு பொலிசார், அவரை நீதிமன்றத்தில் நிறுத்தியிருந்தனர்.
சந்தேக நபரை நீதிவான் 50 ஆயிரம் ரூபா பிணையில் செல்ல அனுமதி அளித்திருந்த நிலையிலேயே, அலரி மாளிகைக்கு முன்பாக நேற்று விலங்குகள் நல ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களைச் சந்தித்த அமைச்சர் சாகல ரத்நாயக்க, விலங்குகள் நலன்புரிச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் கொண்டு வர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளார்.