யஸ்மின் சூகாவினால் இலங்கைக்கு நெருக்கடி - ஜி.எல்.பீரிஸ்
சர்வதேச மனித உரிமை செயற்பாட்டாளர் யஸ்மின் சூகாவினால், எதிர்காலத்தில் இலங்கைக்குப் பெரும் பிரச்சினையை ஏற்படுத்தும் என்று இலங்கையின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் நிழல் தலைமையின் கீழ் உள்ள சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவராக தற்போது இருக்கும், பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இன்று தமது கட்சித் தலைமையகத்தில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தினார்.
இதன்போது அவர், இறுதிக்கட்டப் போரில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றதாகக் கூறிக் கொண்டு இப்போதும் சிலர் முன்னைய அரசாங்கத்துக்கு எதிராக செயற்படுகின்றனர் என்று குற்றம்சாட்டினார்,
குறிப்பாக, போருக்குத் தலைமை தாங்கிய 54 இராணுவ அதிகாரிகளை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தி தண்டனை பெற்றுக் கொடுப்பேன் என்று, சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூகா கூறியிருப்பது, எதிர்காலத்தில் இலங்கைக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்றும் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் கூறினார்.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக 2009இல் அரச படைகள் முன்னெடுத்த இறுதிக்கட்டப் போரில், மீறல்கள் இடம்பெற்றனவா என்று விசாரிக்க ஐ.நா பொதுச்செயலராக இருந்த பான் கீ மூன் 2010 இல் நியமித்த மூன்று பேர் கொண்ட நிபுணர் குழுவில், யஸ்மின் சூகாவும் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.