பொன்.மாணிக்கவேலுக்கு ஒத்துழைக்காவிட்டால் சஸ்பெண்ட் - போலீசாருக்கு உயர்நீதிமன்றம் சுளீர்!
சிலைக் கடத்தல் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு ஒத்துழைப்பு கொடுக்காவிட்டால் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.யாக இருந்த பொன்.மாணிக்கவேல் ஓய்வு பெற்றவுடன் அவரை அந்தப் பிரிவின் சிறப்பு அதிகாரியாக ஓராண்டுக்கு உயர்நீதிமன்றமே நியமித்தது. ஆனால் அவருக்கு உரிய அலுவலகம் இதுவரை ஒதுக்கப்படவில்லை என்றும், சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.
இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்திலும் முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த நீதிபதிகள், உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பொன்.மாணிக்கவேலுக்கு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் உரிய ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இல்லாவிட்டால் சஸ்பெண்ட் செய்யப்படுவீர்கள் என்று எச்சரித்தனர்.
மேலும் பொன்.மாணிக்கவேலுக்கு போதிய வசதிகள் செய்து தராததற்கு அரசுக்கும் எச்சரிக்கை விடுத்ததுடன், தலைமைச் செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கமளித்திட வேண்டிய நிலை ஏற்படும் என்றும் காட்டமாக தெரிவித்தனர்.