இலங்கைப் போரில் இறந்தவர்களின் பெயர்களை பட்டியலிடும் முயற்சியில் சர்வதேச அமைப்புகள்

இலங்கையில் நடந்த இனப்போரில், இறந்தவர்களின் எண்ணிக்கையை கணக்கெடுத்துப் பட்டியலிடும் நடவடிக்கையை, இரண்டு சர்வதேச மனித உரிமை அமைப்புகள் ஆரம்பித்துள்ளன.

தென்னாபிரிக்காவின் ஜெஹனஸ்பேர்க் நகரைத் தளமாகக் கொண்டு செயற்படும், சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான திட்டம் மற்றும், மதனித உரிமைகள் பற்றிய தரவுகளை ஆராயும் குழு ஆகிய அமைப்புகள் இணைந்தே இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளன.

2009ஆம் ஆண்டுமே மாதம் 18ஆம் திகதி இலங்கையில் போர் முடிவுக்கு வந்திருந்த போதும், இந்தப் போரில் இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்பான மதிப்பீடுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்தநிலையிலேயே, போர் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு 10 ஆவது ஆண்டு நிறைவடைவதற்கிடையில், இனப்போரில் மரணமானவர்களின் பட்டியலைத் தயாரிக்கும் பணி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

போரில் இறந்தவர்கள் பற்றிய தரவுகள், பட்டியல்கள் இருப்பில், அவற்றை தம்மிடம் தந்து உதவுமாறு, இலங்கையிலும், வெளிநாடுகளிலும் உள்ள அமைப்புகளிடம், சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான திட்டம் மற்றும், மதனித உரிமைகள் பற்றிய தரவுகளை ஆராயும் குழு ஆகிய அமைப்புகள் கோரியுள்ளன.

அத்துடன் இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வாழும் உறவுகளுடன் பேசி, இறந்தவர்கள் பற்றிய தகவல்களை வழங்குமாறு, அனைத்து தமிழ் மக்களிடமும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இனப்போரில் உயிரிழந்த சிங்களவர் மற்றும் முஸ்லிம்களின் பெயர்களையும் இந்தப் பட்டியலில் உள்ளடக்கத் தயாராக இருப்பதாகவும், இந்த மனித உரிமை அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இறந்தவர்கள் தொடர்பான விபரங்களை அனுப்புபவரைப் பற்றிய தகவல்கள் இரகசியமாக பேணப்படும் என்றும், itjpsl@gmail.com அல்லது, info@hrdag.org என்ற முகவரிக்கு அனுப்புமாறும், சர்வதேச உண்மைக்கும், நீதிக்குமான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூகா தெரிவித்துள்ளார்.

More News >>