அதிபர் வேட்பாளரை தேர்வு செய்வதில் ராஜபக்ச - சிறிசேன கட்சிகளுக்கிடையில் முரண்பாடு
இலங்கையில் இந்த ஆண்டு நடக்கவுள்ள அதிபர் தேர்தலுக்கான வேட்பாளரைத் தேர்வு செய்வதில், அதிபர் மைத்திரிபால சிறிசேன தரப்புக்கும், மகிந்த ராஜபக்ச தரப்புக்கும் இடையில் முரண்பாடுகள் தோன்றியுள்ளன.
2015 அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன வெற்றிபெற்றிருந்தார்.
இலங்கை அதிபராக மைத்திரிபால சிறிசேன தெரிவு செய்யப்பட்டு, இன்றுடன் நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
இலங்கை அதிபரின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் என்ற போதிலும், அரசியலமைப்புச் சட்டத்தின்படி, நான்கு ஆண்டுகள் பூர்த்தியடைந்த பின்னர், பதவியில் இருக்கும் அதிபர் விரும்பினால் முன்கூட்டியே தேர்தலை நடத்த முடியும்.
இந்த ஆண்டு டிசெம்பர் மாதத்துக்கு முன்னதாக அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற நிலையில், வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக பிரதான கட்சிகள் இன்னமும் தமது முடிவை அறிவிக்கவில்லை.
2015 அதிபர் தேர்தலில் மகிந்த ராஜபக்சவும், மைத்திரிபால சிறிசேனவும் எதிர்த்துப் போட்டியிட்டிருந்த போதும், தற்போது, இவர்கள் இருவரும், இணைந்து செயற்படுகின்றனர்.
மகிந்த ராஜபக்சவினால் தற்போது அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது. மைத்திரிபால சிறிசேன, இரண்டாவது பதவிக்காலத்துக்காக போட்டியிடுவது தொடர்பில் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை.
எனினும், மகிந்த ராஜபக்சவின் நிழல் தலைமையின் கீழ் உள்ள சிறிலங்கா பொதுஜன முன்னணியும், மைத்திரிபால சிறிசேனவின் கீழ் உள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், தாமே அதிபர் வேட்பாளரை தெரிவு செய்வோம் என்று முட்டி மோதி வருகின்றன.
வரும் அதிபர் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவே தமது கட்சியின் சார்பில் போட்டியிடுவார் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலராக அண்மையில் நியமிக்கப்பட்ட தயாசிறி ஜெயசேகர, சில நாட்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.
இதையடுத்து, நேற்றுக்காலை கொழும்பில் செய்தியாளர் சந்திப்பை நடத்திய, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைவரான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், அதிபர் வேட்பாளரை மகிந்த ராஜபக்சவே தெரிவு செய்வார் என்றும், அதற்கான உரிமையை யாருக்கும் விட்டுத் தரமாட்டோம் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில், நேற்றுமாலை மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஐக்கி்ய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இடம்பெற்றது.
இதில், உரையாற்றிய சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலர் தயாசிறி ஜெயசேகர, அதிபர் வேட்பாளரை தெரிவு செய்யும் உரிமை தமது கட்சிக்கே இருப்பதாகவும், அதுவேறெவருக்கும் கிடையாது என்றும் கூறியிருப்பதால் சர்ச்சை எழுந்துள்ளது.
மகிந்த ராஜபக்சவின் கட்சியுடன் இணைந்தே தேர்தல்களில் போட்டியிடப் போவதாக மைத்திரிபால சிறிசேன கடந்தமாதம் அறிவித்திருந்தார்.
ஆனால், இந்த இரண்டு கட்சிகளும் இணைந்து போட்டியிடுவதற்கு, இரண்டு கட்சிகளுக்குள்ளேயும் எதிர்ப்புகள் காணப்படுகின்ற நிலையில், அதிபர் வேட்பாளர் யார் என்பதில் இழுபறிகள் தோன்றியுள்ளன.