தனுஷ்கோடியை அழிக்கும் பவள வியாபாரிகள்! மிதக்கும் கல்லால் முளைத்த புதிய ஆபத்து

தனுஷ்கோடியில் இருக்கும் பாரம்பரிய சின்னங்களையும் பவளப்பாறைகளைம் பாதுகாப்பதற்காகக் களமிறங்கியுள்ளனர் மீனவ சமூக மக்கள். பவளப் பாறைகளை வெட்டி எடுத்து விற்பனை செய்கின்றனர். இதனால் பாரம்பரிய சின்னங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர் மீனவர்கள்.

தமிழகத்தில், ராமநாதபுரம் மாவட்டம் கடல்வளம் அதிகம் உள்ள பகுதியாகப் பார்க்கப்படுகிறது. இதனை நம்பி இந்த மாவட்டத்தில் 1,80,000 மீனவர்களும் அவர்களது குடும்பங்களும் வாழ்ந்து வருகின்றனர், இந்த பகுதியின் கடல்வளத்துக்கு முக்கியமான காரணம், அதிகமாகத் தென்படும் பவளப்பாறைகள்தான்.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக பவளப்பாறைகள் பல்வேறு காரணங்களால் அழிந்துவருகின்றன. அந்த வகையில் தற்போது புதிய வகை பிரச்னை முளைத்திருக்கிறது.

அந்தப் பிரச்னை ராமர் பாலம் அமைக்கப் பயன்பட்டதாகக் கூறப்படும் மிதக்கும் கல் வடிவில் வந்துள்ளது. இதைப் பற்றிப் பேசும் பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சின்னத்தம்பி, ' இலங்கைக்குச் செல்ல ராமேஸ்வரத்தில் இருந்து மிதக்கும் கல் கொண்டு பாலம் அமைத்துச் சென்றார் ராமர் என்பது இந்து மக்களின் நம்பிக்கை.

இந்த வகையில் ராமேஸ்வரம் பகுதியில் மிதக்கும் கல் என்று பல காட்சிக் கூடங்கள் பலரால் நடத்தப்படுகின்றன. இதனால் பவளப்பாறைகளுக்குத்தான் ஆபத்து வந்துள்ளது.

பவளப்பாறைகள் என்பது இயற்பியில் தாவர வகையை சார்ந்தது. ஒரு சதுர மீட்டர் வளர 100 ஆண்டுகள் ஆகும், இது கால்சியம் உள்ளிட்ட பொருட்களை தன்னகத்தே கொண்ட பாறை அமைப்பை ஒத்தது.

இதில் பலவகை உண்டு, பவளப்பாறைகள் தான் மீன்களின் பிறப்பிடமும் வாழ்விடமும் ஆகும். பவளப்பாறைகள் இறந்த பின் கரை ஒதுங்கிவிடும். அவை வெயிலில் உலர்ந்த பின் எடுத்துப்பார்த்தால் கல் போன்று கடினமாகவும் கனமாகவும் இருக்கும்.

ஆனால் தண்ணீரில் போட்டால் மிதக்கும். எனவே இதை அனைவரும் மிதக்கும் கல் என்கிறார்கள்.

இங்குவரும் சுற்றுலா பயணிகள் தண்ணீரில் இந்த கல்லை போட்டவுடன் மிதப்பதை பார்த்து மகிழ்ச்சியடைவார்கள். அவற்றை தொட்டு தண்ணீரில் அழுத்திப் பார்த்து சந்தேகத்தைப் போக்கிக் கொள்வார்கள்.

இதுவரைக்கும் எந்தப்பிரச்சனையும் இருந்தது இல்லை. ஆனால் இந்த மிதக்கும் கல்லாகிய பவளப்பாறைகளை பயணிகள் விலைகொடுத்து வாங்கிச்செல்லும் போதுதான் பிரச்சனைகளை ஆரம்பிக்கிறது. இவ்வாறு இந்த செத்த பவளப்பாறைகள் விலைக்கு விற்கப்படுவதால் தனுஸ்கோடி கடலோரங்களில் ஒதுங்கி கிடக்கும் பவளப்பாறைகள் விற்கப்படுகின்றன. இதில் தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து தனுஸ்கோடியில் உள்ள பழைய கட்டிடங்களில் உள்ள பவளப்பாறை உடைத்து எடுக்கப்படுகின்றன.

குறிப்பாக அழிந்துபோன தனுஸ்கோடி நகரத்தின் அடையாளமாக திகழும் 200 வருடம் பழமையான கிறித்துவ ஆலயத்தில் உள்ள கற்களும் உடைத்துத் திருடப்படுகின்றன. இதனால் ஆலயத்தின் பின் சுவரும், பக்கவாட்டு சுவரும் உடைந்துவிட்டன. அதில் உள்ள கல்கள் திருடப்பட்டுவிட்டன. மீதம் இருப்பது பவளப்பாறைகளால் கட்டப்பட்ட ஓங்கி உயர்ந்த ஆலய முன்பக்க சுவர் மட்டுமே. இதையும் சிலர் சுரண்டி கல்லை எடுக்கின்றனர்.

எனவே கூடிய விரைவில் இந்த சுவர் இடிந்துவிழும் நிலையில் உள்ளது. இந்த பழைய ஆலயம் தான் இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு பழைய தனுஸ்கோடி நகரின் அடையாளமாக உள்ளது. எனவே, தனுஷ்கோடி ஆலயத்தை புராதான சின்னமாக அறிவித்து பாதுகாப்பு வேலி அமைத்து அரசு பாதுகாக்கவேண்டும்' என்கிறார்.

More News >>