பொருளாதார ரீதியில் நலிவடைந்தோருக்கு 10% இடஒதுக்கீடு மசோதா - மக்களவையில் தாக்கல்!
பொருளாதார ரீதியில் நலிவடைந்தோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க பிரதமர் மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. இதையடுத்து இதற்கான சட்டத் திருத்தம் கொண்டு வரும் வகையில் மக்களவையில் மத்திய அமைச்சர் தவார் சந்த் கெலாட் இன்று தாக்கல் செய்தார்.
அப்போது இந்த மசோதாவிற்கு சமாஜ்வாதி கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த மசோதா மீது மக்களவையில் விவாதம் நடந்த பின் நிறைவேற்றப்படும். பின்னர் மாநிலங்களவையிலும் நாளை தாக்கல் செய்யப்படுகிறது. இதற்காக இன்று நிறைவடைவதாக இருந்த மாநிலங்களவையின் நடப்புக் கூட்டத் தொடர் நாளை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த மசோதா நிறைவேற சபையில் உள்ள உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு தர வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.