செங்கோட்டையனுக்கு ஏன் கூடுதல் இலாகா-பெரும் ஏமாற்றத்தில் தர்ம யுத்த கோஷ்டி!
அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, அமைச்சர் செங்கோட்டையனுக்கு விளையாட்டுத்துறையும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. மந்திரி பதவிக்காக ஆசைப்பட்டவர்களுக்கும் சேர்த்து செக் வைத்துவிட்டாராம் எடப்பாடி பழனிசாமி.
தமிழக விளையாட்டு துறை அமைச்சராக இருந்த பாலகிருஷ்ண ரெட்டிக்கு, பேருந்து ஒன்றின் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரத்து 500 அபராதமும் விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டு உள்ளது.
இதன்பின் அவருக்கு ஜாமீனும் வழங்கப்பட்டது. எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதுள்ள வழக்குகளை விசாரணை மேற்கொள்ளும் சிறப்பு நீதிமன்றம் இந்த தீர்ப்பினை வழங்கியது.
இதனை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்ய இருக்கிறார். இந்தநிலையில், சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் முதல் அமைச்சர் பழனிசாமியை பாலகிருஷ்ண ரெட்டி சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இந்த சந்திப்பிற்கு பின் தமிழக அமைச்சர் பதவியில் இருந்து பாலகிருஷ்ண ரெட்டி ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவைத் தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையனுக்கு விளையாட்டுத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன்முலம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறையை கூடுதலாக அவர் கவனிப்பார்.
ஆளும்கட்சியில் முன்னாள் அமைச்சர்களாக இருந்த தற்போதைய எம்எல்ஏக்கள் சிலர், இந்தத்துறை எடப்பாடி நமக்குக் கொடுப்பார் என எதிர்பார்த்தனர்.
பன்னீர்செல்வம் ஆதரவாளர்களும் எதிர்பார்த்தனர். ஆனால், செங்கோட்டையனுக்கு துறை ஒதுக்கப்படும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. 'எடப்பாடியின் கை ஓங்குவதை அறிந்து அவர் பக்கம் பெரும்பாலான பொறுப்பாளர்கள் வந்துவிட்டனர். சமீபத்தில் நிரப்பப்பட்ட கட்சிப் பதவியிலும் எடப்பாடியின் விசுவாசிகளுக்கே அதிக பதவிகள் கொடுக்கப்பட்டன.
இதனால் ஓபிஎஸ் தரப்பினர் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். இதைப் பற்றியெல்லாம் முதல் அமைச்சர் கவலைப்படவில்லை.
தற்போது பாலகிருஷ்ணா ரெட்டியின் பதவி பறிபோனதும், அந்தப் பதவிக்கு தென்மாவட்ட எம்எல்ஏக்கள் சிலரும் மேற்கு மாவட்ட எம்எல்ஏக்கள் சிலரும் போட்டி போட்டனர். ஒருவருக்குக் கொடுத்தால் மற்றவர்கள் வம்புக்கு வருவார்கள். அதுவே எந்தப் பக்கமும் சாராத செங்கோட்டையனுக்குக் கொடுத்தால் எந்த வம்பும் வராது என முடிவெடுத்து அவருக்கே கூடுதலாக ஒதுக்கிவிட்டனர். தவிர, பள்ளிக்கல்வித்துறையோடு இளைஞர் நலனும் வருவதால் எந்த சர்ச்சையும் எழவில்லை என்கிறார்கள் அதிமுக பொறுப்பாளர்கள்.