இன்போசிஸிலிருந்து சுதீப் சிங் விலகல்

இன்போசிஸ் மென்பொருள் நிறுவனத்தின் ஆற்றல், பயன்பாடு, வாய்ப்பு வளம், மற்றும் சேவைகள் பிரிவுக்கு உலகளாவிய அளவில் தலைமை வகித்து வந்த சுதீப் சிங், அப்பணியிலிருந்து விலகியுள்ளார்.

நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் மேலாண் இயக்குநருமான சலீல் பரேக்கின் நேரடி தலைமையின் கீழ் சுதீப் வேலை செய்து வந்தார். ஏறத்தாழ இருபது ஆண்டுகள் இந்நிறுவனத்தில் அவர் பணிபுரிந்துள்ளார்.

25 ஆயிரத்திற்கும் அதிகமான பணியாளர்கள் இவரது துறையில் பணிபுரிந்து வருகின்றனர். 1.5 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்பு மிக்க வேலைகளை இவர் கவனித்து வந்தார். 100 மில்லியன் டாலராக இருந்த இன்போசிஸின் வர்த்தகம் 750 மில்லியன் டாலராக உயர்ந்ததில் இவரது பங்கு மிகவும் முக்கியமானதாகும்.

கடந்த ஜனவரியிலிருந்து இந்த ஜனவரி வரைக்குமான ஓராண்டு காலகட்டத்தில் இன்போசிஸ் நிறுவனத்தில் மிக முக்கியமான பணிகளிலிருந்தோர் விலகியுள்ளனர். 2018 ஜனவரி மாதம் இந்நிறுவனத்தில் 26 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவரும் நிறுவனத்தின் ஐரோப்பிய செயல்பாடுகளின் தலைவராயிருந்தவருமான ராஜேஷ் கிருஷ்ணமூர்த்தி விலகினார். கடந்த ஜூன் மாதம், இன்போசிஸில் ஒரு துறையின் செயல் துணை தலைவராக இருந்த சங்கீதா சிங்கும், உற்பத்தி பிரிவின் தலைவராக இருந்த நிடேஷ் பங்காவும் விலகினர். தலைமை நிதி அதிகாரியாக இருந்த எம்.டி. ரங்கநாத், கடந்த ஆகஸ்ட் மாதம் நிறுவனத்தை விட்டு வெளியேறினார். ஆலோசனை பிரிவின் உலகளாவிய தலைவராக இருந்த கென் டூம்ஸ் கடந்த அக்டோபர் மாதம் விலகினார்.

சுதீப் சிங், வாரணாசியிலுள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழக இந்திய தொழில்நுட்ப கழகத்தில் கெமிக்கல் எஞ்ஜினியரிங் பட்டமும், கொல்கத்தா இந்திய மேலாண்மை கழகத்தில் வணிக மேலாண்மையில் பட்டமும் பெற்றுள்ளார்.

More News >>