தீப்பிடித்த நான்கு மாடி கட்டடத்தில் இருந்து குழந்தைகளை தூக்கி வீசிய தம்பதியினர்

இலங்கையின் மத்திய பகுதியில் உள்ள கண்டி நகரில் நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தை அடுத்து, தமது மூன்று குழந்தைகளையும் யன்னல் வழியாக தூக்கி வீசி விட்டு, தந்தையும் தாயும் கீழே குதித்து உயிர்தப்பினர்.

கண்டி நகரில், யட்டிநுவர வீதியில் உள்ள நான்கு மாடி வணிக கட்டடம் ஒன்றில் இன்று காலை 6.30 மணியளவில் திடீரெனத் தீப்பற்றியது.

மூன்றாவது மாடியில் தீ வேகமாகப் பரவிக் கொண்டிருந்த போது, அங்கு மூன்று குழந்தைகளும், தந்தையும் தாயும், சிக்கியிருந்தனர்.

அவர்களால் தப்பிக்க முடியாத நிலையில், யன்னலை உடைத்து, கீழே கூடி நின்றவர்கள் மத்தியில் தமது குழந்தைகளை தூக்கி வீசினர்.

எட்டு வயதுடைய நிசாலன், 7 வயதுடைய சத்தியஜித், மூன்றரை வயதுடைய சாகித்யன் ஆகிய மூன்று குழந்தைகளையும், மூன்றாவது மாடியில் இருந்து தூக்கி வீசிய போது, கீழே நின்றவர்கள் அவர்களை தாங்கிப் பிடித்துக் கொண்டனர்.

இதையடுத்து, அந்தக் குழந்தைகளின் தந்தையான ராமநாதன் ராமராஜ் யன்னல் வழியாக சற்று கீழே இறங்கி, கண்ணாடிகளை உடைத்து வழியேற்படுத்த, தாயாரான 32 வயதுடைய ராதிகா, கீழே குதித்தார்.

அதன் பின்னர், ராமராஜூம் நிலத்தில் குதித்து காயங்களுடன் தப்பிக் கொண்டார்.

இந்த விபத்தில் சிக்கி உயிர் தப்பிய ஐந்து பேரும், தற்போதுகண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.(வீடியோ உள்ளது.)

More News >>