ரயில் கட்டணம் உயர்த்தும்படி ரயில்வே மறு ஆய்வுக் குழு சிபாரிசு

புதுடெல்லி: பண்டிகை காலங்கள் மற்றும் ரயில்களில் கீழ் படுக்கைகள் உள்ளிட்டவைக்கு அதிக கட்டணம் வசூலிக்க வேண்டும் என ரயில்வே அமைத்த குழு ரயில்வே நிர்வாகத்திற்கு சிபாரிசு செய்துள்ளது.

பிரீமியம் ரயில்களில் ‘பிளெக்சி பேர்’ எனப்படும் கட்டண முறை பின்பற்றப்பட்டு வருகிறது. இதில், ஒவ்வொரு 10 சதவீத படுக்கைகள் முன்பதிவு முடிந்தவுடன், 10 சதவீதம் கட்டணம் அதிகரிக்கும். இந்த கட்டண முறையை மறு ஆய்வு செய்வதற்காக ரயில்வே நிர்வாகம் கட்டண மறு ஆய்வு குழுவை அமைத்தது. இக்குழு தனது அறிக்கையை ரயில்வே வாரியத்திடம் நேற்று முன்தினம் சமர்ப்பித்தது.

அதில், விமான நிறுவனங்கள் மற்றும் ஓட்டல்கள் கடைபிடிக்கும் கட்டண முறையை பின்பற்றுமாறு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான முக்கிய சிபாரிசுகள் வழங்கப்பட்டுள்ளன: அதில், விமானங்களில் முன்புற இருக்கைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அதுபோல் ரயில்களில் கீழ் படுக்கைகளுக்கு அதிக கட்டணம் வசூலிக்க வேண்டும். பயணிகளின் வரவேற்பை பெற்ற வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்களிலும், வசதியான நேரங்களில் இயக்கப்படும் ரயில்களிலும் கட்டணத்தை உயர்த்த வேண்டும்.

குறிப்பாக, மற்ற மாதங்களில் கட்டணத்தை குறைத்துவிட்டு பண்டிகை காலங்களில் கட்டணத்தை அதிகரிக்க வேண்டும். சமையலறை பெட்டி இணைக்கப்பட்ட ரயில்களில் பரீமியம் கட்டணம் வசூலிக்க வேண்டும். அசவுகரியமான நேரங்களில், குறிப்பாக இரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை, பிற்பகல் 1 மணி முதல் மாலை 5 மணி வரை, சேருமிடத்தை அடையும் ரயில்களில் கட்டண தள்ளுபடி அளிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

More News >>