தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் படக் குழு மீது வழக்குப்பதிய பீகார் கோர்ட் உத்தரவு!
பிரதமர் மன்மோகன் சிங் பற்றிய தி "ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர்" படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர்கள் உட்பட 15 பேர் மீது வழக்குப் பதிவு பீகார் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
2004 முதல் 2014 வரை மன்மோகன்சிங் பிரதமராக இருந்த போது அவரது மீடியா ஆலோசகராக இருந்தவர் சஞ்சய் பாரு. இவர் மன்மோகன் சிங்குடனான அனுபவங்களைத் தொகுத்து எழுதிய புத்தகத்தை அடிப்படை மாகக் கொண்டு தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் என்ற திரைப்படம் தயாராகியுள்ளது.
இந்தப் படத்தில் மன்மோகன் சிங் வேடத்தில் நடிகர் அனுபம் கெர், சஞ்சய் பாருவேடத்தில் அக்சய் கண்ணா மற்றும் சோனியா, ராகுல், வாஜ்பாய் உள்ளிட்ட பல தலைவர்கள் கதா பாத்திரங்களிலும் நடிகர்கள் பலர் நடித்துள்ளனர். வரும் 11-ந் தேதி திரைக்கு வர உள்ள இப்படத்தின் டிரைலர் டிசம்பர் இறுதியில் வெளியானது. டிரைலர் வெளியானது முதலே படம் பற்றிய பல்வேறு சர்ச்சைகளும் எழுந்து , படத்தை தடைசெய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்தன.
இந்நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள முக்கிய கதாபாத்திரங்களை தெளிவின்றி இருட்டறைக் காட்சிகள் போல் எடுத்துள்ளதாக பீகாரைச் சேர்ந்த சுதிர் குமார் ஓஜா என்ற வழக்கறிஞர் போலீசில் புகார் செய்தார். இந்தப் புகாரைப் பதிய போலீசார் மறுத்ததால் முசாபர்பூர் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், நடிகர்கள் உள்பட 15 பேர் மீது வழக்குப்பதிய போலீசுக்கு உத்தரவிட்டார்.