தொழிற்சங்கங்களின் 2-வது நாள் பந்த் - கேரளா, மே.வங்கம், ஒடிசாவில் ரயில் சேவை பாதிப்பு!
மத்திய தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தின் 2-வது நாளான இன்றும் பல்வேறு மாநிலங்களில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் 2 நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தால் பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடவில்லை. பொதுத் துறை மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்கவில்லை.
கேரளா, ஒடிசா, மே.வங்க மாநிலங்களிலும் ரயில்கள் ஓடவில்லை. கேரளா, கர்நாடகா, அசாம், ஒடிசா, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் வேலை நிறுத்தப் போராட்டத்தால் பெரும்பாலான பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டத்தால் தமிழகத்தில் பெரும் பாதிப்பு இல்லை. மத்திய அரசு ஊழியர்கள் பெரும்பான்மையினர் பணிக்குச் செல்லவில்லை. சில பகுதிகளில் மட்டும் ஆட்டோக்கள் ஓடவில்லை.
தமிழகத்தில் இருந்து கேரளா, கர்நாடகம், புதுச்சேரி மாநிலங்களுக்கு பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் 10 தொழிற்சங்கங்களைச் சேர்ந்த 20 கோடிக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 48 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.