அதிமுகவுக்கு ஆதரவு- பாஜகவுக்கு அல்வா.... ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மீது டெல்லி கடும் அதிருப்தி!
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மீது டெல்லி பாஜக மேலிடம் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தமிழகத்தில் நிழல் அரசை நடத்துவதற்காக பன்வாரிலால் புரோகித்தை அனுப்பி வைத்தது டெல்லி. அவரும் தொடக்கத்தில் தமிழக அரசுக்கு போட்டியாக ஒரு சர்காரை நடத்தி வந்தார்.
ஆனால் காலப் போக்கில் பன்வாரிலால் புரோகித்தின் நடவடிக்கைகள் தமிழக அரசுக்கு சாதகமாகவே மாறிவிட்டது. இதன் உச்சகட்டமாக சட்டசபையில் ஆளுநர் வாசித்த உரையில், மத்திய அரசுக்கு எதிரான விமர்சனங்களும் இடம்பெற்றிருந்தன.
பன்வாரிலால் புரோகித்தின் திடீர் மாற்றத்தை டெல்லி பாஜக மேலிடத்தால் ஜீரணிக்க முடியவில்லையாம். அதுவும் வழக்கமாக அனுப்பி வைக்கப்படும் மாநில சட்டம் ஒழுங்கு குறித்து அறிக்கையை கூட கடந்த சில வாரங்களாக டெல்லிக்கு பன்வாரிலால் புரோகித் அனுப்பவும் இல்லையாம்.
திரைமறைவில் அதிமுக அரசுக்கு முழுமையான ஆதரவு தரும் வகையிலேயே பன்வாரிலால் புரோகித் நடந்து கொள்கிறார் என்கிற கோபம் பாஜக மேலிடத்தில் இருக்கிறதாம். தமிழகத்தில் காலூன்றவே முடியாத நிலையில் இருக்கும் நிலையில் பன்வாரிலால் புரோகித்தும் கூட தங்களுக்கு ஆதரவாக இல்லையே என்கிற கொந்தளிப்பும் பாஜக மேலிடத்தில் இருக்கிறதாம்.
ஏற்கனவே தமிழக பாஜக புள்ளிகள், அதிமுக அரசுடன் இணைந்து செயல்படுகின்றனர்; சில மத்திய அமைச்சர்களும் கூட மாதந்தோறும் கப்பம் வாங்கிக் கொள்கின்றனர். இப்போது ஆளுநரும் தங்களது பிடியில் இல்லை என்பதால் கடும் அதிருப்தியில் உள்ளதாம் டெல்லி மேலிடம்.