பொங்கல் பரிசு... ஸ்மார்ட் கார்டு இருக்கா.. பிடிச்சுக்கோ ஆயிரம்... அமைச்சர் உதயக்குமாரின் ஸ்டைலே தனிதான் !
பொங்கலுக்கு அறிவித்த 1000 ௹பாய் பரிசை வாங்க ஆலாய் பறக்கிறார்கள் தமிழக மக்கள். அதிகாலை 5 மணி முதலே ரேசன் கடைகளில் கூட்டம் அலை மோதுகிறது.
தமிழகம் முழுவதுமே கடந்த 3 நாட்களாக இதே நிலைதான். பல இடங்களில் டோக்கன் வழங்கி வரிசைப்படியாக வழங்கினாலும் குளறுபடிகள். பல இடங்களில் பொங்கல் பொருள் இல்லாமல் ஆயிரம் ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது. மதுரை மாவட்டத்தில் பல பகுதிகளில் இன்று முதல் தான் பொங்கல் பரிசுப் பொருட்கள் விநியோகம் நடந்தது. மாவட்ட அமைச்சரான ஆர்.பி.உதயக்குமார் தனது தொகுதியான திருமங்கலத்தில் பல்வேறு கிராமங்களில் தடபுடலாக விழா நடத்தி பரிசுப் பொருட்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அமைச்சரிடம் நேரடியாக பரிசுப் பொருளை வாங்குவதற் காக ஒவ்வொரு ஊரிலும் 20, 30 பேர் என முன்கூட்டியே டோக்கன் வழங்கப்பட்டது.
இந்த டோக்கனை பெறுவதிலேயே பல ஊர்களில் அடிதடிச் சண்டை ஏற்பட்டது. இதனால் அமைச்சர் பங்கேற்கும் விழா மேடையை பொது மக்கள் அதிகாலை முதலே கூட்டமாக சூழ்ந்தனர். பிரச்னை வரலாம் என்று அமைச்சர் உதயக்குமார் நினைத்தாரோ என்னவோ திடீரென அதிரடி முடிவு எடுத்தார். ஸ்மார்ட் கார்டு வைத்திருப்பவர்கள் அனைவருக்கும் தலா இரு ஐநூறு தாள்களை வாரி வழங்கினார். ஆனால் உஷாராக ரேசன் கடை ஊழியர்கள் பணம் வாங்கிய வர்களின் ஸ்மார்ட் கார்டுகளை வாங்கி தங்கள் வசம் வைத்துக் கொண்டனர். முறையாக பதிவு செய்து விட்டு பின்னர் மற்ற பரிசுப் பொருட்களை பெறும் போது ஸ்மார்ட் கார்டு தருவதாக கூறி விட்டனர். 1000 ரூபாய் வாங்கிய சந்தோசத்தில் ஸ்மார்ட் கார்டு எப்ப கிடைத்தால் என்ன? கிடைக்காவிட்டால் கூட புதுசா வாங்கிக்குவோம் என்று சென்றதை காண முடிந்தது.
கூட்டத்தை சமாளிக்க பல ஊர்களிலும் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் இதே பாணியைக் கடைப்பிடித்தது என் ஸ்டைலே தனி ஸ்டைல் என்பது போல் இருந்தது. பாவம் அதிகாரிகளும், ரேசன் கடை ஊழியர்களும் நடைமுறைச் சிக்கலை அமைச்சரிடம் எடுத்துக் கூற முடியாமல் பரிதவித்தனர்.