பெரியார் விருது வழங்கப்பட்டது ஏன்? - வளர்மதி விளக்கம்
தமிழக அரசின் தந்தை பெரியார் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது குறித்து முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி விளக்கம் கொடுத்துள்ளார்.
தமிழக அரசின் தந்தை பெரியார் விருது பா. வளர்மதிக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து பா. வளர்மதி குறித்த கேலிச் சித்திரங்கள் சமூக வலைதளங்களில் தீயாக பரவியது.
இந்நிலையில், சென்னையில் தமிழக அரசின் இந்த விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி கலந்துகொண்டு பேசிய பா. வளர்மதி, “பெரியார் விருது எனக்கு அறிவிக்கப்பட்ட உடன் சமூக வலைதளங்களில் சில கேலிச் சித்திரங்களைப் பார்த்தேன். அந்த கேலிச் சித்திரங்களில் தினம்தோறும் கோவிலுக்குப் போகும் வளர்மதிக்கு பெரியார் விருதா? என கேட்கப்பட்டிருந்தது.
இந்த சித்திரங்களை பரப்புகிறவர்கள் யார் என்பது எங்களுக்கு தெரியும். 9 வயதில் எங்கள் கிராமத்தில் தந்தை பெரியார் முன் என் மேடைப் பேச்சு தொடங்கியது. இன்று தந்தை பெரியார் பெயரிலான விருதை நான் பெறுவேன் என நினைத்து கூட பார்க்கவில்லை.
தந்தை பெரியார் முன்வைத்தது கடவுள் மறுப்பு மட்டுமல்ல. தந்தை பெரியாரின் 2-வது முக்கிய கொள்கை பெண்ணுரிமை. அதனால்தான் பெண்ணாகிய என்னை பெரியார் விருதுக்கு தேர்வு செய்துள்ளார்கள்” என்று கூறியுள்ளார்.