பிரதமர் ரணிலை தோற்கடிக்க 28 கட்சிகளுடன் வியூகம் வகுக்கிறார் ராஜபக்ச
எதிர்காலத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியையும், அதன் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவையும் தோற்கடிக்கும் நோக்கில், பாரிய கூட்டணி ஒன்றை அமைக்கும் முயற்சியில், மகிந்த ராஜபக்ச தரப்பு இறங்கியுள்ளது.
மகிந்த ராஜபக்சவின் நிழல் தலைமையின் கீழ், சிறிலங்கா பொதுஜன முன்னணி என்ற கட்சி உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்சி, கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் நடத்தப்பட்ட உள்ளாட்சித் தேர்தல்களில் அதிகளவு இடங்களில் வெற்றியைப் பெற்றிருந்தது. மகிந்த ராஜபக்சவின் மீள் எழுச்சியாக இது பார்க்கப்பட்டது.
இந்தநிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் 26ஆம் தேதி, திடீரென ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிய இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்திருந்தார். அரசியல்சட்டத்துக்கு முரணாக, நிகழ்த்தப்பட்ட ஆட்சி மாற்றம் மற்றும் நாடாளுமன்றக் கலைப்பு என்பனவற்றினால், அதிபர் மைத்திரிபால சிறிசேன மற்றும் மகிந்த ராஜபக்ச அணியின் செல்வாக்கு வீழ்ச்சி சடுதியாக கண்டுள்ளது.
அடுத்து வரும் தேர்தல்களில், அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும், மகிந்த ராஜபக்சவின் நிழல் தலைமையின் கீழ் உள்ள சிறிலங்கா பொதுஜன முன்னணியும் இணைந்து போட்டியிடத் திட்டமிட்டுள்ளன. அதேவேளை, தமது செல்வாக்கு சரிவு கண்டுள்ளதால், சிறிலங்கா பொதுஜன முன்னணி பாரிய அரசியல் கூட்டணி ஒன்றை அமைத்துப் போட்டியிடத் தயாராகி வருகிறது.
இந்தப் பரந்த அரசியல் கூட்டணியில் இணைத்து கொள்வது குறித்து 28 அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் பேச்சுக்களை நடத்தியிருப்பதாக, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார். எதிர்காலத் தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியையும், அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்கவையும் தோற்கடிப்பதை இலக்காக கொண்டே இந்தப் பாரிய அரசியல் கூட்டணியை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
உள்ளாட்சித் தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்றிருந்த போதும், தற்போதைய அரசியல் சூழல் சாதகமற்றதாக இருப்பதாலேயே, ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான கூட்டணியை எதிர்கொள்வதற்கு சிறிலங்கா பொதுஜன முன்னணி பாரிய கூட்டணியை அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.