௹.1000 கட்சிப் பணத்தையா கொடுக்கிறீர்கள்? - சாட்டையை சுழற்றிய உயர் நீதிமன்றம் அனைவருக்கும் வழங்கத் தடை!

பொங்கல் போனசாக அனைவருக்கும் ரூ.1000 வழங்க சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

என்ன நோக்கத்திற்காக 1000 ரூபாய் கொடுக்கப்படுகிறது என்று கேள்வி கேட்ட நீதிபதிகள், கட்சிப் பணத்தைக் கொடுத்தால் கேள்வி கேட்க மாட்டோம். அரசுப் பணத்தை வாரி இறைப்பது என்ன நியாயம் என்றும் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியுள்ளனர். அத்துடன் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் கொடுக்கலாம் என்றும் பரிந்துரை செய்துள்ளனர். இந்த ஆண்டு பொங்கலுக்கு இலவசப் பொருட்களுடன் ரூ 1000 ஆயிரம் பரிசாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. கடந்த 3 நாட்களாக ரேசன் கடைகளில் ரூ 1000 மற்றும் பொங்கல் இலவசப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பொங்கல் பரிசு வழங்க எதிர்ப்பு தெரிவித்து கோவையைச் சேர்ந்த டேனியல் ஜேசுதாஸ் என்பவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். கஜா புயல் பாதிப்பால் நிவாரண உதவிக்கு கணிசமான நிதி தேவைப்படுகிறது. இந்நிலையில் அனைவருக்கும் ரூ 1000 பரிசு வழங்குவது அரசுக்கு நிதிச் சுமையை அதிகரிக்கும் என்பதால் தடை விதிக்க வேண்டும் என்றார். இவ்வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்தது. அப்போது அனைவருக்கும் ரூ 1000 பரிசு வழங்குவதன் நோக்கம என்ன என்று நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

கட்சிப் பணத்தை கொடுத்தால் கேள்வி கேட்க முடியாது. ஆனால் அரசுப் பணத்தை இவ்வாறு வாரியிறைப்பதை ஏற்க முடியாது என்று தெரிவித்த நீதிபதிகள், அனைவருக்கும் ௹.1000 வழங்கத் தடை விதித்தனர். மேலும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு வழங்கலாம் என்றும் நீதிபதிகள் அனுமதி வழங்கினர். சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீர்ப்பை எடுத்து ரூ 1000 பரிசு வழங்குவது உடனடியாக நிறுத்தப்படுமா? யார்? யாருக்கு கிடைக்கும் என்ற விவாதங்கள் எழுந்துள்ளன.

More News >>