எங்களை மிரட்டினால் பா.ஜ.க.வை பொசுக்கிடுவோம் - சிவசேனா அமைச்சரின் ஆவேசம்!
மகாராஷ்டிராவில் பா.ஜ.க-சிவசேனா இடையே மோதல் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது.மத்தியிலும், மகாராஷ்டிர மாநிலத்திலும் கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் சிவசேனா வரும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர முரண்டு பிடிக்கிறது.
இதனால் எரிச்சல் அடைந்த பா.ஜ.க. தலைவர் அமித்ஷா கூட்டணிக்கு வராவிட்டால் சிவசேனாவை தேர்தலில் தோற்கடித்து துடைத்தெறிவோம் என்று மிரட்டல் விடுத்தார். இது சிவசேனாவை கொந்தளிக்கச் செய்துள்ளது. அமித் ஷாவின் பேச்சுக்கு சிவசேனா கட்சியின் முக்கியத் தலைவரும், மாநில அமைச்சருமான ராம்தாஸ் பதிலடி கொடுத்துள்ளார். 2014-ல் சட்டசபை தேர்தலில் மோடி அலை வீசும் போதே தனித்துப் போட்டியிட்டு 63 தொகுதிகளில் வென்றோம்.
இப்போதோ 5 மாநிலங்களில் பா.ஜ.க.தோல்வியடைந்து பரிதாப நிலையில் உள்ளது. மகாராஷ் டிராவிலும் நுழைந்து எங்களை மிரட்டினால் பா.ஜ.க.வை பொசுக்கி விடுவோம் என்று பதிலடி கொடுத்தார். இன்று மகாராஷ்டிராவில் மோடி சுற்றுப்பயணம் செய்யும் மரத் வாடா பகுதியில் பசியால் வாடும் ஆடு, மாடுகளுக்கு உணவு தீவனங்களை வழங்கும் போராட்டத்தை சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மேற்கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.