போர்க்குற்றச்சாட்டில் சிக்கிய இலங்கை இராணுவ அதிகாரிக்கு முக்கிய பதவி

இலங்கை இராணுவத்தின், இரண்டாவது நிலைத் தளபதி பதவியான இராணுவத் தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் சவேந்திர டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன இந்த நியமனத்தை வழங்கியுள்ளார் என, இலங்கை இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்துள்ளார்.மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போரில் 58 ஆவது டிவிசன் படையணியை வழிநடத்திய முக்கிய அதிகாரியாவார்.

இறுதிக்கட்டப் போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு இவர் பொறுப்பாக இருந்தார் என்று மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன.

போரின் இறுதியில், சரணடைந்த விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவு தலைவர்களான நடேசன், புலித்தேவன், உள்ளிட்டவர்கள், மேஜர் ஜெனரல் சவேந்திர டி சில்வாவின் தலைமையிலான 58 ஆவது டிவிசன் படையினராலேயே படுகொலை செய்யப்பட்டனர்.இவரது படைப்பிரிவிடம் சரணடைந்த நூற்றுக்கணக்கான புலிகளின் தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள், அவர்களின் குடும்பத்தினர் இன்னமும் காணாமல் போயுள்ளனர்.

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரான, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கமானவரான, இவர் இறுதிக்கட்டப் போரில் ஆற்றிய பங்கை கௌரவிக்கும் வகையில், ஐ.நாவுக்கான இலங்கையின் துணைத் தூதுவராக நியமிக்கப்பட்டார்.

எனினும், 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர், இவர் முக்கியத்துவம் வாய்ந்த இராணுவப் பொறுப்புக்களில் நியமிக்கப்படாமல் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார்.

தற்போது, அவருக்கு இராணுவத்தின் இரண்டாவது நிலைப்பதவி வழங்கப்பட்டுள்ளதற்கு, மனித உரிமை அமைப்புகள் கடும் கண்டனங்களை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News >>