அங்கன்வாடியில் ஆட்சியர் மகள்: ஆச்சரியத்தில் திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர், தன் மூன்று வயது மகளை பாளையங்கோட்டையிலுள்ள அங்கன்வாடியில் சேர்த்துள்ளார். ஆட்சியரின் இந்தச் செயல் மாவட்ட மக்களின் மனங்களை கவர்ந்துள்ளது.

அரசு உயர் அதிகாரிகளுக்கு பாமர மக்களின் கஷ்டங்களை புரிந்து கொள்ள முடியாது என்பதே பொதுவாக மக்களின் எண்ணமாக இருந்து வருகிறது. உயர்தட்டு வாழ்க்கை முறை கொண்ட அதிகாரிகளுக்கு வயலிலும் தோட்டத்திலும் பாடுபடும் தங்கள் வாழ்க்கையும் அதன் தேவைகளும் புரியாது என்று மக்கள் நினைப்பதால் அதிகாரிகளை நெருங்கி தங்கள் கோரிக்கைகளை வைக்க தயங்குகிறார்கள். அந்த தயக்கத்தை போக்கி, கலெக்டரும் நம்மில் ஒருவர்தான் என்ற உணர வைத்துள்ளது ஷில்பா பிரபாகரின் நடவடிக்கை.

"என் மகள் கீதாஞ்சலி சமுதாயத்தின் அனைத்து நிலைகளிலுள்ள மக்களுடனும் பழக வேண்டும், அனைவரிடமும் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று கற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் விரும்பியதால் மற்ற மழலையர் பள்ளிகளில் சேர்க்காமல் அங்கன்வாடியில் சேர்த்துள்ளேன். இம்மையம் எனது அலுவலகத்திற்கு அருகில் உள்ளது. இங்குள்ள அனைத்து ஆசிரியர்களும் மிகவும் ஊக்கத்துடன் பணியாற்றுகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு அங்கன்வாடிக்கும் ஒரு ஸ்மார்ட்போன் வழங்கப்பட்டுள்ளது. அதை பயன்படுத்தி குழந்தைகளின் உயரம் மற்றும் எடை அளவிடப்படுகிறது. நல்ல கட்டமைப்பும் அனைத்து வசதிகளும் கொண்ட இம்மையங்களில் உரிய பயிற்சி பெற்ற ஆசிரியைகள் உள்ளனர். குழந்தைப்பருவ பராமரிப்பு மற்றும் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் அங்கன்வாடிகளை மேம்படுத்தும் திட்டங்களும் உள்ளன," என்று கூறியுள்ள ஷில்பா பிரபாகர், கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர். 2009ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்ற இவர், திருநெல்வேலி மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>