இதயத்தை காணல... நாக்பூர் போலீஸை கிறங்கடித்த புகார்

திருடப்பட்ட தன் இதயத்தை கண்டுபிடித்து தரக்கோரி காவல் நிலையத்தை அணுகிய இளைஞரை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் போலீஸார் திணறிய தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் நகரில் களவாடப்பட்ட பொருள்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி கடந்த வாரம் நடைபெற்றது. ரூ.82 லட்சம் மதிப்புள்ள திருட்டு பொருள்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாக்பூர் காவல் ஆணையர் பூஷண் குமார் உபத்யாய், ருசிகர சம்பவம் ஒன்றை பகிர்ந்து கொண்டார்.

"திருடப்பட்ட பொருள்களை எங்களால் மீட்டு தர இயலும். எங்களால் தீர்த்துவைக்க முடியாத பிரச்னைகளை பற்றிய புகார்களும் வருகின்றன. நாக்பூர் காவல் நிலையம் ஒன்றிற்கு வந்த வாலிபர், பெண் ஒருவர் தம் இதயத்தை களவாடி விட்டதாகவும், அதை காவல்துறை மீட்டுத் தர வேண்டும் என்றும் புகார் அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அவர் கூறியதை கேட்ட நிலைய காவல் அதிகாரிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அவர் தமது உயர் அதிகாரியிடம் நிலையை விளக்கி ஆலோசனை கேட்டுள்ளார்.

சூழ்நிலையை சமாளிப்பதற்காக உயர் அதிகாரிகள் அந்த நபரிடம் அதிகாரப்பூர்வமற்ற முறையில் உரையாடியுள்ளனர். இந்தியாவில் தற்போது இருக்கும் சட்டங்களின் கீழ், அவரது குற்றச்சாட்டினை பதிவு செய்ய இயலாது என்று விளக்கி அவரை திருப்பி அனுப்பியுள்ளனர்," என்று அவர் தெரிவித்துள்ளார்.

போலீஸ் பிரச்னையும் பெரும் பிரச்னைதான் போங்க...

More News >>