8-ம் வகுப்பு வரை இந்தி கட்டாயம் - பா.ஜ.க வின் அடுத்த ஆப்பு தயார்!
நாடு முழுவதும் 8-ம் வகுப்பு வரை இந்தி கட்டாயம் என்ற அறிவிப்பை வெளியிட மத்திய அரசு திட்டமிட்டுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா முழுவதும் பள்ளிகளிலும், அரசு நிர்வாகத்திலும் இரு மொழிக் கொள்கை தான் நடைமுறையில் உள்ளது. அந்தந்த மாநிலத்தில் பேசப்படும் தாய்மொழியுடன் ஆங்கிலம் இணைப்பு மொழியாக 2 ள்ளது. இந்தி மொழியை தேசிய மொழியாக்க பல கட்டங்களில் நடந்த முயற்சிகள் தமிழகம், மே.வங்கம் போன்ற மாநிலங்களின் கடும் எதிர்ப்பால் தோல்வியிலேயே முடிந்தது. தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, கோவா, மே.வங்கம், அசாம் ஆகிய மாநிலங்களில் தற்போது வரை பள்ளிகளில் தாய் மொழியில் பாடத்திட்டமும் அதனுடன் ஆங்கிலமும் கற்பிக்கப்படுகிறது.
தற்போதைய பா.ஜ.க அரசு இப்போது நாடு முழுவதும் முதற்கட்டமாக 8-ம் வகுப்பு வரை இந்தியை கட்டாயமாக்க முடிவு செய்துள்ளது. இதற்காக புதிய கல்விக் கொள்கையை வகுக்க இஸ்ரோ முன்னாள் தலைவர் கஸ்தூரிரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட 9 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு விரிவான வரைவு அறிக்கையை டிசம்பர் 31-ந் தேதி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தில் கொடுத்துள்ளது. முதற்கட்டமாக அறிவியல் மற்றும் கணிதப் பாடங்களுக்கு நாடு முழுமைக்கும் ஒரே மாதிரி பாடத்தை இந்தியில் அமல்படுத்தலாம் என்று சிபாரிசு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாசி உள்ளது.
கஸ்துரி ரங்கன் கமிட்டியின் பரிந்துரைகள் மீது மத்திய அரசு பரிசீலனை செய்த பின் 8-ம் வகுப்பு கணிதம், அறிவியல் பாடங்களுக்கு இந்தி கட்டாயம் என்ற அறிவிப்பு எந்த நேரமும் வெளியாகலாம் என்று தெரிகிறது. மத்திய அரசின் கட்டாய இந்தித் திணிப்பு பின்னணியில் பா.ஜ.க.வின் தாய் அமைப்பான ஆர்.எஸ் எஸ்.சின் நெருக்கடியும் காரணமாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு விஜயதசமி விழாவில் பேசிய ஆர்.எஸ்.எஸ்.தலைவர் மோகன் பகவத், நாடு முழுவதும் பள்ளிகளில் இந்தியில் கற்பிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.