இலங்கை உச்சநீதிமன்றத்துக்கு முதல்முறையாக மலையகத் தமிழ் நீதிபதி

இலங்கை உச்சநீதிமன்றத்தின், நீதிபதியாக மலையகத் தமிழர் ஒருவர் முதல்முறையாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று உச்சநீதிமன்றத்துக்கான மூன்று நீதிபதிகளையும், மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கான நீதிபதி ஒருவரையும் நியமித்தார்.

இலங்கையின் அரசியல்சட்டப்படி, நாடாளுமன்ற சபாநாயகர் தலைமையிலான 10 பேர் கொண்ட அரசியலமைப்பு பேரவையே, உச்சநீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம் ஆகியவற்றுக்கான நீதிபதிகளின் நியமனங்களை உறுதி செய்ய வேண்டும்.

அதிபர் சிறிசேன பரிந்துரைத்த நீதிபதிகளின் பட்டியலில் இருந்து, தெரிவு செய்யப்பட்ட மூன்று நீதிபதிகளை உச்சநீதிமன்றத்துக்கும், ஒருவரை மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கும், அரசியலமைப்பு சபை இந்த வாரம் அங்கீகாரம் அளித்திருந்தது.

அரசியலமைப்பு சபையினால் அனுமதி அளிக்கப்பட்ட நான்கு நீதிபதிகளுக்குமான நியமனங்களை இலங்கை அதிபர் சிறிசேன நேற்று வழங்கினார்.

உச்சநீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நீதிபதிகளில் சிதம்பரப்பிள்ளை துரைராஜா என்ற தமிழ் நீதிபதியும் உள்ளடங்கியிருக்கிறார்.

இலங்கையின் உச்சநீதிமன்றத்தில் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள முதலாவது மலையகத் தமிழர் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, நீதிபதி துரைராஜா, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதியாக பணியாற்றி வந்தார்.

More News >>