இலங்கையில் முன்கூட்டியே அதிபர் தேர்தல்?- நிராகரிக்கிறார் சிறிசேனவின் சகா

இலங்கையில் அதிபர் தேர்தலை முன்கூட்டியே நடத்துவதற்கான அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியிடப்படலாம் என்று செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் நெருங்கிய சகா ஒருவர், அதனை நிராகரித்திருக்கிறார்.

இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன, பதவியேற்று நேற்றுடன் நான்கு வருடங்கள் பூர்த்தியாகி விட்டன. நான்கு வருடங்களுக்குப் பின்னர், அதிபர் தேர்தலை முன்கூட்டியே நடத்தும் அதிகாரம் இருப்பதால், விரைவில் அதற்கான அறிவிப்பை அதிபர் சிறிசேன வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

அதிபர் தேர்தலுக்கான அரசிதழ் அறிவிப்பு நாளை வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என்றும் கூட செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்தநிலையில், அதிபர் சிறிசேனவின் தலைமையிலான சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சாளரான மகிந்த சமரசிங்க, நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போது, முன்கூட்டியே அதிபர் தேர்தல் நடத்தப்படுவதற்கு வாய்ப்பில்லை எனத் தெரிவித்தார்.

“சட்டரீதியான அதிகாரம் அதிபர் சிறிசேனவுக்கு இருந்தாலும், முன்கூட்டியே அதிபர் தேர்தலை நடத்தும் எண்ணம் அவருக்கு இல்லை.

அதிபர் சிறிசேனவின் பதவிக்காலம் அடுத்த வருடம் ஜனவரி மாதமே முடிகிறது. வரும் அக்டோபர் இறுதியில் அல்லது நவம்பரிலேயே தேர்தலுக்கான அழைப்பை அவர் வெளியிடுவார்.” என்றும் சுதந்திரக் கட்சியின் பேச்சாளர் மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.

அதிபர் சிறிசேனவுக்கு தென்னிலங்கையில் மாத்திரமன்றி, வடக்கிலும் பிரபலம் உள்ளதால், அவரே சுதந்திரக் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுவார் என்றும் அவர் கூறினார்.

இந்த விடயத்தில் மகிந்த ராஜபக்சவின் நிழல் தலைமையின் கீழ் உள்ள சிறிலங்கா பொதுஜன முன்னணியின் நிலைப்பாடு என்னவென்பது தனக்குத் தெரியாது என்றும், மகிந்த சமரசிங்க தெரிவித்தார்.

More News >>